பட்டியலினத்தவர் இறுதி ஊர்வலத்துக்கு மறுப்பு: எஸ்.பி., நேரில் ஆஜராக ஆணையம் உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'திருவண்ணாமலை மாவட்டத்தில், பட்டியலினத்தவர் இறந்தால், அவர்கள் உடலை பொது பாதையில் எடுத்துச் செல்ல, பிற சமூகத்தினர் தடுப்பது தொடர்பாக, வரும் 29ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என, அந்த மாவட்ட எஸ்.பி., மற்றும் கலெக்டரின் உதவியாளருக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், மோத்தக்கல் கிராமத்தில், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் இறந்தால், அவர்கள் உடலை, பொது பாதையில் எடுத்துச் செல்ல விடாமல், பிற சமூகத்தினர் தடுப்பதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது. தடுக்கக் கூடாது அதன் அடிப்படையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணைத் தலைவர் இமயம், உறுப்பினர்கள் செல்வக்குமார், ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். நேற்று இந்த வழக்கை விசாரித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவு: பட்டியலினத்தை சேர்ந்தவர்களின் உடல்களை பொது பாதையில் எடுத்துச் செல்வதை யாரும் தடுக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், திருவண்ணாமலை மாவட்டம், மோத்தக்கல் கிராமத்தில், பட்டியலினத்தவர்கள் உடலை, அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் பொது பாதையில் எடுத்துச் செல்ல விடாமல், பிற சமூகத்தினர் தடுத்து வருவது தெரிகிறது. இது ஜாதிய வன்கொடுமையாகும். இதற்கு காவல் துறையும், இதர அலுவலர்களும் ஆதரவாக இருப்பதும் தெரிய வருகிறது. இது, எஸ்.சி., - எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ், தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். விளக்கம் எனவே, இந்த ஜாதிய வன்கொடுமை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, வரும் 29ம் தேதி திருவண்ணாமலை கலெக்டரின் நேர்முக உதவி யாளரும், எஸ்.பி.,யும், ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.