தி.மு.க., ஆட்சியில் கட்டிய குடியிருப்புக்கள் : ஆய்வு செய்ய வல்லுநர் குழு:அமைச்சர் தகவல்
சென்னை: ''தி.மு.க., ஆட்சியின் போது கட்டிய குடியிருப்புகள் முறையாக கட்டப்படவில்லை. இவற்றை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்படும்,'' என அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார். சட்டசபை கேள்வி நேரத்தின்போது, மலரவன் (அ.தி.மு.க.,), ''தி.மு.க., ஆட்சியின்போது, கோவை உக்கடத்தில், கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள் பூமிக்குள் புதைந்து வருகிறது. இதை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இதற்கு, வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் அளித்த பதில்: தி.மு.க., ஆட்சியில், கோவை, உக்கடத்தில், 15 ஏக்கரில், 26.34 கோடி ரூபாயில், 2,732 வீடுகள் கட்டப்பட்டன. நான்காவது பிரிவில், 144 வீடுகள் கொண்ட குடியிருப்பு 15 முதல் 20 செ.மீ., ஆழத்தில் புதைந்துள்ளது. அம்மன் குளத்திலும் இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து, குடியிருப்புகளை நேரில் ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டார். வீட்டுவசதித்துறை செயலர், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடன் சென்று, ஒக்கியம் துரைப்பாக்கம், உக்கடம் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்களை ஆய்வு செய்தேன். தி.மு.க., அரசு திறமையில்லாத ஒப்பந்ததாரரிடம் பணியைக் கொடுத்ததால், சரியாக கட்டப்படவில்லை. எல்லா கட்டடங்களும் சோதனை செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளன. முதல்வரின் அனுமதி பெற்று, குடியிருப்புக்களை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைத்து, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த முறை நாங்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டபோது, நம் முதல்வர் தன்னந்தனியாக சட்டசபை வந்தார். திறம்பட வாதிட்டார், சென்றார். இப்போது, தி.மு.க.,வினர் சட்டசபைக்கு வந்ததும் ஓடுகின்றனர், ஓடிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களை எல்லாம் பிடித்து முதல்வர், சிறையில் அடைப்பார். இவ்வாறு வைத்திலிங்கம் பேசினார்.