அவதுாறாக பேசியதாக வீடியோ மாஜி எம்.எல்.ஏ., மகள் மீது புகார்
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குறித்து, முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவதுாறாக பேசுவது போல் வெளியான வீடியோ தொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியம்மாள் மகள் கீதா மீது, மதுரை மாவட்ட எஸ்.பி.,யிடம், அ.தி.மு.க., நிர்வாகி புகார் அளித்துள்ளார்.அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் உதயகுமார், கட்சி பொதுச்செயலர் பழனிசாமியை அவதுாறாக பேசியது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வெற்றி பெற்ற, ஆண்டிபட்டியில் வெற்றி பெற முடியவில்லை என்றால், நீயெல்லாம் என்ன தலைவர்' என, அவர் பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக, மதுரை மாவட்ட அ.திமு.க., பிரமுகர் தமிழ்செல்வம், நேற்று எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில், 'உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியம்மாள் மகள் கீதா, அந்த வீடியோவை தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பழனிசாமி குறித்து உதயகுமார் அவதுாறாகப் பேசியதாக, போலி வீடியோவை, தனியார் 'டிவி' வெளியிட்டதுபோல் பதிவிட்டுள்ளார். கீதா மற்றும் இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார். - நமது நிருபர் -