பதிவுத்துறைக்கு கூட்ட அரங்கம் ரூ.2.16 கோடியில் திறப்பு
சென்னை : சென்னை ராஜாஜி சாலையில், 2.16 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட பதிவுத் துறையின் நவீன கூட்ட அரங்கு நேற்று திறக்கப்பட்டது. நாட்டில் பதிவுத்துறை துவங்கியபோது, 1864ல் தென் மாநிலங்களின் முதல் பத்திரப்பதிவு அலுவலகம், சென்னை ராஜாஜி சாலையில் கட்டப்பட்டது. 'இந்தோ சாரசனிக்' கட்டட கலையில் இந்த கட்டடம் கட்டப்பட்டது. மெட்ராஸ் நாட்டு தளக் கூரை, மங்களூரு தளக் கூரை, தேக்கு மரங்கள் என, அரிய பொருட்களை பயன்படுத்தி, இந்த கட்டடம் அப்போது கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்ட இந்த கட்டடத்தை முழுமையாக புதுப்பிக்க, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி, அதி நவீன வசதிகளுடன் ஒரே சமயத்தில், 150 பேர் வரை அமரக்கூடிய நவீன கூட்ட அரங்கம், 2.16 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, இந்த புதிய அரங்கத்தை திறந்து வைத்தார். இதில் முதல் நிகழ்வாக, பதிவுத் துறையின் ஆகஸ்ட் பணித் திறன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பதிவுத்துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.