உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதவ் அர்ஜுனாவால் கட்சியில் குழப்பம் திருமாவளவனிடம் நிர்வாகிகள் குமுறல்

ஆதவ் அர்ஜுனாவால் கட்சியில் குழப்பம் திருமாவளவனிடம் நிர்வாகிகள் குமுறல்

'கூட்டணி தொடர்பாக, தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜுனாவின் ஆலோசனையை ஏற்க வேண்டாம்; அவருக்கு முக்கியத்துவமும் தர வேண்டாம்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும்' என, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதை அப்போதே வி.சி., வரவேற்றுள்ளது. இதனால், தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 6ல், வி.சி., துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்' என்ற அமைப்பு சார்பில் அம்பேத்கர் குறித்த நுால் வெளியீட்டு விழா நடக்க ஏற்பாடானது. இதில் திருமாவுடன் நடிகர் விஜயும் பங்கேற்கவிருப்பதாக தகவல் பரவியது. 'தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டு, கூட்டணியை கடுமையாக விமர்சிக்கும் நடிகர் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், திருமா எப்படி பங்கேற்கலாம்' என, தி.மு.க., தரப்பில் கேள்வி எழுப்பி திருமாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, 'வரும் சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., கூட்டணியில் தான் இருப்போம்' என திருமாவளவன் விளக்கம் அளித்தார். இந்நிலையில், 'ஆதவ் அர்ஜுனாவின் ஆலோசனையை கேட்க வேண்டாம்' என, திருமாவிடம் கட்சியின் மாநில நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். வி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:கட்சிக்கு புதியவரான ஆதவ் அர்ஜுனாவுக்கு, திருமாவளவன் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே துணைப் பொதுச்செயலர் பொறுப்பு வழங்கினார். கட்சி நிகழ்ச்சிகளில், தன் அருகில் அமர வைக்கிறார். அவர் கொடுக்கும் ஆலோசனையை ஏற்று செயல்படுகிறார். இது கட்சியிலும், கூட்டணி உறவிலும் குழப்பம் ஏற்படுத்துகிறது. இதனால், கட்சிக்குள் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு; எதிர்ப்பு என இரு கோஷ்டிகள் உருவாகி உள்ளன. இது கட்சிக்கு பின்னடைவு ஏற்படும். இதை தவிர்க்க வேண்டும் என்றால், ஆதவ் அர்ஜுனா தரும் ஆலோசனைகளை திருமா ஏற்கக்கூடாது. அதைத்தான் கட்சி நிர்வாகிகள், திருமாவிடம் வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை