பதிவுத்துறை சுற்றறிக்கையால் குழப்பம்
'சொத்து விற்பனை தொடர்பான ஆவணங்களை, பதிவு செய்யும் போது, மூலப்பத்திரத்தை கேட்க வேண்டாம்' என, பதிவுத்துறை பிறப்பித்த சுற்றறிக்கையால் புதிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது. சொத்து விற்பனை தொடர்பான பத்திரப்பதிவின் போது, முந்தைய அசல் பத்திரத்தை தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் பதிவு சட்டத்தில், 55ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இந்த பிரிவை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. பதிவு சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட, '55ஏ' என்ற பிரிவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கருத்தில் வைத்து, சொத்து வாங்கும் மக்களின் நலனுக்காக, மாற்று நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, சொத்து ஆவண பதிவின் போது, மூலப்பத்திரம் தாக்கல் செய்வதை, மீண்டும் கட்டாயமாக்கும் வகையில், பதிவு சட்டத்தில், 34சி என்ற புதிய பிரிவை சேர்க்க அரசு முடிவு செய்தது. இதற்கான சட்டத்திருத்த மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய சுற்றறிக்கை இந்நிலையில், பதிவு சட்டத்தின், 55ஏ பிரிவை எதிர்த்து மீண்டும் ஒருவர் தொடர்ந்த வழக்கை, சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், இப்பிரிவு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், பதிவுத்துறை நேற்றுமுன்தினம் புதிய சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில், பதிவு சட்டத்தின், 55ஏ பிரிவு செல்லாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், சொத்து ஆவணப்பதிவின் போது, மூலப்பத்திரம் கேட்டு மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு காரணமாக வைத்து, பத்திரத்தை பதிவு செய்யாமல் நிராகரித்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு சட்ட மசோதா நிறைவேற்றிய நாளில், அதற்கு நேர் எதிரான சுற்றறிக்கை வந்திருப்பது, பத்திரப்பதிவு ஊழியர்களிடம், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சொத்து பதிவுக்கு மூலப்பத்திரம் கட்டாயம் என, புதிதாக சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நிறைவேறி உள்ளது. ஆனால், இன்னும் சட்டமாகவில்லை. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க, பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அமலுக்கு வரும் போது, எதை பின்பற்ற வேண்டும் என்பதை, அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.