கூட்டணி தொடர்பாக பேசாதீர் காங்., நிர்வாகிகளுக்கு உத்தரவு
சென்னை : ''சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக, பொதுவெளியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பேசக் கூடாது; கூட்டணி தொடர்பாக, டில்லி மேலிட தலைவர்கள் முடிவு செய்வர்,'' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசினார். சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, அழகிரி, கிருஷ்ணசாமி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ரூபி மனோகரன், ஹசன் மவுலானா உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கிரிஷ் சோடங்கர் பேசுகையில், ''சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக, பொது வெளியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது. கூட்டணி தொடர்பாக, டில்லி மேலிடத் தலைவர்கள் முடிவு செய்வர்,'' என்றார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ராகுல் இளகிய மனம் கொண்டவர். எங்கே துயரம் நடந்தாலும் அவர்களை அழைத்து பேசுவார். பா.ஜ., ஆளும் மாநிலத் தலைவர்களிடமும் ராகுல் பேசுவார். அந்த வகையில் தான் விஜயிடம் பேசி உள்ளார். இதில் அரசியல் இல்லை,'' என்றார்.