மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் காங்., - எம்.பி., விஜய்வசந்த் கோரிக்கை
சென்னை:'மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்' என, லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மானத்தை, கன்னியாகுமரி தொகுதி காங்., - எம்.பி., விஜய்வசந்த் முன்மொழிந்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். கடலில் மீன்பிடிக்க செல்லும் போது, விபத்துகள், அண்டை நாட்டு அரசுகள் நடத்தும் தாக்குதல்கள், புயல் மற்றும் பெருங்காற்று போன்றவற்றால் ஏற்படும் உயிர் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏராளம்.இலங்கை, பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு சிறைகளில், நம் மீனவர்கள் அல்லல்படுகின்றனர். தற்போது, 211 இந்திய மீனவர்கள், 1,172 படகுகள் பாகிஸ்தானிலும், 141 மீனவர்கள், 198 படகுகள் இலங்கையிலும், 95 மீனவர்கள் வங்க தேசத்திலும் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர்.கடல் அரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களால், கடலோர கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. கடலில் குறைந்து வரும் வளங்கள் காரணமாக, மீன்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. மீனவர்களின் நலனை பாதுகாக்கவும், மீன்வளத்தை பெருக்கவும், மத்திய அரசு மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.