ரயில் விபத்தில் சதி வேலையா: என்.ஐ.ஏ., விசாரணை
சென்னை: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமா என்ற கோணத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.பொன்னேரி ரயில் நிலையம் அருகே, கடந்த மாதம் முதல் வாரத்தில், தண்டவாள இணைப்புக் கம்பிகள் கழற்றப்பட்டு சிதறிக் கிடந்தன. கடந்த மாதம் 21ல், பொன்னேரி - அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில், நான்கு இடங்களில் பாதையை மாற்றி விடும் இணைப்பு பெட்டியின், 'போல்ட்'கள் கழற்றப்பட்டு உள்ளன. அடுத்தடுத்து நடந்த செயல்கள் குறித்து, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இதே மாவட்டத்தில், பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளாகி இருப்பதால், சதி வேலை காரணமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று, விபத்து பகுதியில் மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு நடத்தினர். விபத்து நடந்த இடத்தில் இருந்த, 'சிக்னல் கியர், ஸ்விட்ச் பாயின்ட்' போன்ற சாதனங்கள், வழக்கத்துக்கு மாறாக இருந்தன. தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு, மாதிரிகளை சேகரித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, மாநில போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினரிடரும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.சந்தேகம் வலுப்பது ஏன்?
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், 'சிக்னல் இன்டிகேட்டர் போர்டு'ஐ, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி நேற்று ஆய்வு செய்தார். சிக்னல் இன்டிகேட்டர் போர்டில் உள்ளபடி, பாக்மதி விரைவு ரயிலுக்கு பிரதான லைனில் செல்லும்படி தான், ரயில் நிலைய மேலாளரால் சிக்னல் தரப்பட்டுள்ளது. அந்த சிக்னலை ஏற்றுக் கொண்டு, பாக்மதி ரயில் ஓட்டுனரும் ரயிலை, மெயின் லைனில் தான் இயக்கி இருக்கிறார்.ஆனாலும், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில், லுாப் லைனுக்கு போய் உள்ளது. ரயில் நிலைய மேலாளரும், ரயில் ஓட்டுநரும் சரிவர செயல்பட்டுள்ளபோதிலும், ரயில் திசை மாறி லுாப் லைனுக்குள் சென்றது எப்படி என்பது தான் தெரியவில்லை. அதில் தான் சந்தேகம் எழுகிறது என்கின்றனர், ரயில்வே பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.