| ADDED : பிப் 10, 2024 12:16 AM
'நிலம் கையகப்படுத்துவதில் சுணக்கம், திட்டச் செலவு அதிகரிப்பு காரணமாகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவனை கட்டுவது தாமதமாகி விட்டது. மற்றபடி, விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கும்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் பேசுகையில், ''2019ல் பொதுத்தேர்தலுக்கு முன்பாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த மருத்துமனை கட்டுமான பணிகள் எப்போது முடியும்,'' எனக் கேட்டார்.இதற்கு பதிலளித்து, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் பேசியதாவது:மதுரை எய்ம்ஸ்க்கு நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாகி விட்டது. மாநில அரசின் பணி அது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும், துரதிஷ்டவசமாக கொரோனோ பேரிடர் காலம் வந்துவிட்டது.சைக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் திட்டம் அது. காலதாமதம் காரணமாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பட்ஜெட்டில் இருந்த தொகையானது, மேலும் அதிகரித்துவிட்டது. 1,200 கோடி ரூபாயாக இருந்த திட்டச் செலவு, தற்போது 1,900 கோடி ரூபாயாகி விட்டது. அந்த திட்டத்தின் ஆரம்பகட்ட ஆய்வு பணிகள் முடிந்து விட்டன.திட்ட நிர்வாக ஆலோசகர் நியமனமும் முடிந்து விட்டது. மாஸ்டர் பிளான் தயாராகி விட்டது. டெண்டர் விடும் பணியும் முடிந்து விட்டது. இதைப் பற்றி யாருக்கும் கவலை வேண்டாம்.நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலோ, திட்டச் செலவு அதிகரித்துவிட்டால், அதை மறுசீராய்வு செய்து புதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலோ, எந்த குறிப்பிட்ட திட்டமும் தாமதம் ஆவது வழக்கமானது தானே.அதுதான், மதுரை எய்ம்ஸ் விவகாரத்திலும் நடந்துள்ளது. மற்றபடி, அங்கு விரைவில் பணிகள் துவங்கும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.-- நமது டில்லி நிருபர் -