உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதுப்பு நிலத்தில் கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது: ஆணையம்

சதுப்பு நிலத்தில் கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது: ஆணையம்

சென்னை:'சதுப்பு நிலத்தில், கட்டுமானங்கள், சாலை அமைப்பதை அனுமதிக்க முடியாது' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில், தனியார் கட்டுமான நிறுவனம், 1400க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இதற்காக, சதுப்பு நிலத்தில் சாலை அமைக்கப்படுகிறது. அங்குள்ள நீர்நிலைகளில், டன் கணக்கில் கட்டுமான பொருட்கள், மண் கொட்டப்படுகின்றன. இதனால், ராம்சர் சதுப்பு நில பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதிக்கப்படுவதாக, நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் விசாரித்து வரும் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணைய உறுப்பினர் செயலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தாக்கல் செய்த அறிக்கை: சதுப்பு நிலத்திற்கு நீர் செல்லும் மழைநீர் வடிகால் என்பதால், பெரும்பாக்கம் -- பள்ளிக்கரணை கால்வாய் மிகவும் முக்கியமானது. இயற்கை ஓடையாக இருந்த வடிகால், இப்போது சிறிய வடிகாலாக சுருங்கி விட்டது. இதனால், பெருமழை காலங்களில் வெள்ள அபாயம் அதிகரிக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதி என்பதால், இந்த கால்வாயை பராமரிப்பது அவசியம். பெரும்பாக்கம் ஏரியிலிருந்து துவங்கும் வாய்க்கால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இணைகிறது. இடைப்பட்ட பகுதியில், கட்டுமானப் பணிகள் நடப்பதால், இயற்கையாக நீர் வெளியேறுவதற்கான சங்கிலி அறுபட்டுள்ளது. சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை, இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்துகிறது. 'நீர் நிலைகள், சதுப்பு நிலங்களை, தனியார் பயன்பாட்டிற்கு கொடுக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இயற்கை வளங்களை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே, சதுப்பு நிலங்களை வீட்டுமனை, சாலை அமைக்க பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு ஒதுக்கப்பட்டது எப்படி? மழை காலங்களில் நீர் தேங்குவதால், முதலில் சதுப்பு நிலமாக இருந்த சில பகுதிகள், 100 ஆண்டுகளுக்கு முன், விவசாயம், மேய்ச்சல் பயன்பாட்டிற்காக தனி நபர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக, மாநில சதுப்பு நில ஆணையம் தெரிவித்துள்ளது. காலப்போக்கில் வீட்டுமனைக்காகவும், சாலை அமைக்கவும் கட்டட கழிவுகளை கொட்டினர். இதனால், சதுப்பு நிலத்தின் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என, ஆணையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ