உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோரமண்டல் உரத் தொழிற்சாலை சுற்றுச்சூழல் இழப்பீடு தர ஒப்புதல்

கோரமண்டல் உரத் தொழிற்சாலை சுற்றுச்சூழல் இழப்பீடு தர ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''சென்னை எண்ணுாரில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலை, சுற்றுச்சூழல் இழப்பீடாக, 5.92 கோடி ரூபாய் தர முன்வந்துள்ளது,'' என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.எண்ணுார் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில், சமீபத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது குறித்த, கவன ஈர்ப்பு தீர்மானத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ஜெகன்மூர்த்தி, எஸ்.எஸ்.பாலாஜி, வேல்முருகன், செல்வப்பெருந்தகை, சின்னதுரை, அருள், மாரிமுத்து ஆகியோர் பேசினர். 'மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதால், ஆலையை மூட வேண்டும்' என வலியுறுத்தினர்.அமைச்சர் மெய்யநாதன் அளித்த பதில்: உரத் தொழிற்சாலையில், கடந்த மாதம் 26ம் தேதி நள்ளிரவு, அமோனியா குழாய்களில் வாயு கசிவு ஏற்பட்டது; 20 நிமிடங்களில் கசிவு நிறுத்தப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழிற்சாலை மற்றும் குழாய் அமைந்துள்ள பகுதியை ஆய்வு செய்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம், உடனடியாக உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டது; தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஏழு பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு அமைத்தது. அக்குழு உடனடியாக ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது. அமோனியா எடுத்து வரும் குழாய்கள், கடலுக்கு அடியில் இரண்டரை கிலோ மீட்டர் துாரம் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு பதிலாக புதிய குழாய்கள், அதிநவீன கண்காணிப்பு தானியங்கி கட்டுப்பாட்டு கருவி, முழு தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.விபத்து ஏற்படும்போது, விபத்தை தடுப்பதற்கான சாதனங்கள் அமைக்கப்பட வேண்டும். அமோனியா எடுத்துச் செல்லும் குழாய் உட்பட அனைத்து பகுதிகளிலும் கசிவு இருந்தால், உடனடியாக அமோனியா வினியோகம் நிறுத்தப்பட வேண்டும்.மேலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, அமோனியாவை தொழிற்சாலைக்கு கொண்டு வருவது குறித்து, தகவல் தெரிவிக்க வேண்டும்.இந்த பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற, தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழு பரிந்துரை அடிப்படையில், சுற்றுச்சூழல் இழப்பீடாக, 5 கோடியே 92 லட்சத்து 50,888 ரூபாயை ஏன் வசூலிக்கக் கூடாது என விளக்கம் கேட்டு, அந்நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அந்தத் தொகையை கட்ட, அந்நிறுவனம் முன்வந்துள்ளது. தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ள அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தொழிற்சாலை மேற்கொள்வதை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்த பின், அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Varadarajan Nagarajan
பிப் 22, 2024 20:12

தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என அரசியல்வாதிகள் முடிவுசெய்யமுடியாது. இந்த போக்கு நீடித்தால் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆலைகள் அதிமுக ஆட்சியிலும் அதுபோல் மரு மார்க்கத்திலும் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடரும். இது ஒவொரு மோசமான வாதம். விபத்து என்பது அனைத்து பாதுகாப்பு முறைகளையும் தாண்டி தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித தவறு போன்ற சில காரணங்களால் ஏதோ ஒருமுறை நடைபெறுவது. சாலைகளில் தினம் தினம் பல விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் நடக்கின்றன. அதற்காக சாலைகளை மூடிவிடலாமா? விமானம், ரயில் போன்றவைகளால்கூட கூட சில நேரம் விபத்துக்கள் ஏற்படுகின்றது. அவைகளை நிறுத்திவிடலாமா? அரசியல்வியாதிகள் உபயோகப்படுத்த வாகனங்கலால்கூட விபத்து ஏற்படுகின்றது. அவைகளை தடைசெய்துவிடலாமா? விபத்து ஏற்படாமல் பாதுகாப்புநாடவடிக்கைகள் மேற்கொண்டு தொழிற்சாலைகள் இயங்க என்ன செய்யவேண்டும் என பரிந்துரைக்கலாம். அதற்க்கு பதிலாக தொழிற்சாலைகளை மூடிவிட்டால் வேலை வாய்ப்புகள் எப்படி வரும்? அரசுக்கு வரி வருவாய் எப்படி வரும்? அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் எப்படி நன்கொடை வரும்? அதிகாரிகளுக்கு எப்படி லஞ்சம் வரும்? இந்த தொழிற்சாலை பல ஆண்டுகளாக எந்த விபத்தும் இல்லாமல் இயங்கிவருகிறது. எதிர்பாராத காரணத்தினால் விபத்து நடந்துள்ளது. அதை சரிசெய்து மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. கடந்த ஆண்டு வரலாறு காணாத மழையில் மணாலி கடல் பரப்பில் என்னை படலம் மிதந்து பாதிப்பு ஏற்படுத்தியது. எனவே அந்த நிறுவனத்தையும் மூடிவிடலாம் என சொல்லவில்லை. அரசியல்வியாதிகளுக்கு வரவேண்டியது வந்துவிட்டதா?


Raa
பிப் 22, 2024 11:59

விபத்துக்காக ஆலையை மூடச்சொல்லும் ஆள்பவர்கள், கேவலமான ரோட்டினால் ஏற்படும் விபத்து உயிர் இழப்புகள் காரணத்தினாலும், டாஸ்மாக் சாவுகளுக்காகவும் அரசை கலைக்க சொல்வார்களா? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் முன்கூட்டியே அவர்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுகிறதா என்று அடிக்கடி ஆய்வு செய்யவில்லை? தமிழ் படத்தில் கிளைமாக்ஸில் போலீஸ் வந்து கைது பண்ணுமே அதுமாதிரி பண்ணத்தான் லாயக்கா? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கவில்லை? எப்பப்பாரு கம்பெனி மேலயே பலியைப்போடுவது


duruvasar
பிப் 22, 2024 07:19

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திமுகஆட்சி நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த எண்ணையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த..‌‌................. செய்திகளை இப்படி மாநிலத்தின் விவரங்களோடு படித்து பழகிவிட்டதால் மேற்சொன்ன தகவல் இந்த செய்தியில் இல்லாதலால் சற்று வித்தியாசமாக உணரநேரிட்டது.


duruvasar
பிப் 22, 2024 07:07

இழப்பீடு தொகை 59250888 ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளதாம். பலே ஒரு ஸ்க்ரு ஆணி , சட்டை பட்டன் என துருவி ஆராய்ந்து மதிப்பீடு செய்த அந்த நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். இருந்தும் அந்த நூல் கண்டுக்கான 53 பைசாவையும் மதிப்பீட்டில் சேர்த்திருக்கலாம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை