| ADDED : நவ 22, 2025 12:26 AM
மதுரை: ''தைரியம் என்பது பரிசல்ல. அது போராடும் மனப்பான்மை. பயத்தை வெல்வதன் மூலமே தைரியம் பிறக்கிறது,'' என, மதுரையில் பெண் தொழில்முனைவோர் மாநாட்டில், ஆப்பரேஷன் சிந்துாரை வழிநடத்திய கர்னல் பூனம் தெரிவித்தார். இவரது ராணுவச் சேவையை பாராட்டி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், வீ என்ற மகளிர் அமைப்பின் தலைவர் ராஜகுமாரி ஜீவகன், 'அக்னி புத்ரி' விருது வழங்கினர். விருதைப் பெற்ற கர்னல் பூனம் பேசியதாவது: என் தாத்தாவை போல, அப்பாவை போல சீருடை அணிய வேண்டும்; கடினமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை, துவக்கத்தில் இருந்தே தீர்க்கமாக எனக்கு இருந்தது. மிகவும் எளிதான சராசரி வாழ்க்கையை மனம் விரும்பவில்லை. நிறைய முறை தோற்ற போதும் துவண்டு போகாமல் தொடர்ந்து முயற்சி செய்தேன். வெற்றிக்கென குறுக்கு வழிகள் இல்லை. விடா முயற்சி மன உறுதியுடன் போராட வேண்டும். வெற்றியை விட தோல்வியே நிறைய பாடங்களை கற்றுத் தந்தது. தோல்வியை கண்டு பயப்படாமல் அதை வெற்றிக்கான வழியாக மாற்றியதால், ஒருநாள் ராணுவ அகாடமியில் சேர்ந்து ராணுவ சீருடை அணிந்தேன். பயத்தை எதிர்கொள்ள வேண்டும். பயத்தை வெல்வதன் மூலமே தைரியம் பிறக்கிறது. வலிமையாக இருப்பது, உறுதியுடன் இருப்பது மட்டும் ஆண் என்பதாக அர்த்தமாகாது. பெண்களை மதிக்கத் தெரிய வேண்டும். பெண்களின் பார்வையில் அவர்களது பிரச்னையை புரிந்து கொள்ள வேண்டும். இதைத் தான் ஆணுக்கான குணங்களாக சமுதாயம் எதிர்பார்க்கிறது . இளைஞர்கள் அதிகளவில் ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்ற வர வேண்டும். நான் 1999ல் ராணுவத்தில் சேர்ந்த போது, 52 பேர் பெண்கள்; தற்போது 7,000 பெண்கள் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.