பிரமாண பத்திரத்தில் பொய் தகவல் என புகார் மாஜி வீரமணி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
திருப்பத்துார்:தேர்தல் பிரமாண பத்திரத்தில், பொய் தகவல் அளித்தது தொடர்பாக வரும், 26ல், நீதிமன்றத்தில் ஆஜராக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு ஜோலார்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி, கடந்த சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில், மூன்றாம் முறையாக போட்டியிட்டு தோற்றார்.பிரமாண பத்திரத்தில், அவர், சொத்துக்களை மறைத்து தாக்கல் செய்துள்ளதாகவும், வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய, வேலுாரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் வழக்கு தொடர்ந்தார்.ராமமூர்த்தி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, வீரமணியின் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறி, அவர் மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 125ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.ஆனால், இரு ஆண்டுகளுக்கு மேலாக அவர் மீது வழக்கு பதியவில்லை என, ராமமூர்த்தி மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.இந்நிலையில், ஜூலை 25ல், வீரமணியின் பிரமாண பத்திரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறி, அவர் மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, திருப்பத்துார் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.அதன்படி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி சொத்துக்களை மறைத்து, முறைகேடாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், வீரமணி மீது தேர்தல் ஆணையம், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கு விசாரணை, திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த, 13ல், விசாரணைக்கு வந்தது. வழக்கை மாஜிஸ்திரேட் மகாலட்சுமி விசாரித்து, வரும், 26ம் தேதி அன்று, முன்னாள் அமைச்சர் வீரமணி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வேலுார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான, 21 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், 2016 ஏப்., 1 முதல், 2021 மார்ச் 31 வரை வருமானத்திற்கு அதிகமாக, 654 மடங்கு சொத்து வாங்கி குவித்துள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.