உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலுார் ஆணவ கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை உறுதி

கடலுார் ஆணவ கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை உறுதி

கடலுார் மாவட்டம் குப்பநத்தம் புதுகாலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணுவின் மகன் முருகேசனும், அதே பகுதியில் வசித்த, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமியின் மகளான கண்ணகியும் காதலித்தனர். இருவரும் 2003ல், பதிவு திருமணம் செய்தனர். இந்த விபரம், கண்ணகியின் தந்தை, சகோதரர்களுக்கு தெரிய வந்ததும், இருவருக்கும், வாய் மற்றும் மூக்கு வழியாக வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி கொலை செய்து, சடலங்களை எரித்தனர். இதற்கு, போலீசாரும் உடந்தை. சி.பி.ஐ., விசாரித்த இந்த வழக்கில், 2021ல் தீர்ப்பு வழங்கிய கடலுார் சிறப்பு நீதிமன்றம், கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டி, இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, எஸ்.ஐ., தமிழ்மாறன் மற்றும் அய்யாசாமி, ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி வெங்கடேசன் உள்ளிட்ட 15 பேரில், 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றம், மருதுபாண்டிக்கான தண்டனையை ஆயுளாக குறைத்தது. ரங்கசாமி, சின்னத்துரை விடுவிக்கப்பட்டதுடன், துரைசாமி உள்ளிட்ட மற்றவர்களுக்கான தண்டனை உறுதி செய்தது. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழ்மாறன், மருதுபாண்டியன், செல்லமுத்து உள்ளிட்ட எட்டு பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் கே.வினோத்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது. - புதுடில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை