சென்னை: 'கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு தமிழக போலீஸ் ஒத்துழைப்பு வழங்குவதில்லை' என, சுங்கத்துறை அதிகாரிகள் புகார் கூறுகின்றனர். மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்படுகிறது. இதன்கீழ், சுங்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் செயல்படுகின்றன. துறைமுகங்கள் மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் என, சர்வதேச பயணியர் வந்து செல்லும் இடங்களில், இந்த அமைப்புகளின் அதிகாரிகள் பணியில் இருப்பர். சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் தங்கம், போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்வர். வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும், 'கன்டெய்னர்'களில் என்னென்ன பொருட்கள் உள்ளன; அவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளனவா; முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிப்பர். ரவுடி கும்பல் சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், அதில் தொடர்புடையவர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்ய வேண்டும். அதாவது, தங்கம் அல்லது போதை பொருட்களை கடத்தி வந்தவரை கைது செய்து, அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடித்து கைது செய்யும் அதிகாரமும் சுங்கத்துறைக்கு உள்ளது. இருப்பினும், உள்ளூரில் உள்ள ரவுடி கும்பல்கள் பின்னணியில் இருந்தால், அந்தந்த மாநில போலீஸ் உதவியை சுங்கத்துறையினர் கேட்கலாம். இந்நிலையில், சென்னை விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் பிடிபடும் கடத்தல் சரக்குகளின் பின்னணியில் உள்ளவர்களை பிடிக்க செல்லும் போது, தமிழக போலீசார் சரிவர ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக சுங்கத்துறை உயர் அதிகாரிகள் புகார் வாசிக்கின்றனர். சுங்கத்துறை சிறப்பு நுண்ணறிவு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கடத்தலில் ஈடுபடும் நபர்கள், மூன்று பிரிவுகளாக செயல்படுகின்றனர். இதில், 'கேரியர்' எனும் கடத்தல் பொருட்களை எடுத்து வருபவர், சுலபமாக எங்களிடம் சிக்கி விடுவார். அவரை கைது செய்து விசாரிக்கும் போது, பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய விபரம் தெரியவரும். அவர்கள் பெரும்பாலும் ஒரே நகரத்தில் செயல்படும் கும்பலாக இருக்கின்றனர். சிக்கியவர் தரும் தகவல் அடிப்படையில், தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றை சோதனை செய்வோம். சில குறிப்பிட்ட பகுதிகளில், அரசியல் செல்வாக்கு அதிகம் இருப்பவர்களை, எளிதாக எங்களால் அணுக முடிவதில்லை. தயங்குகின்றனர் இது மாதிரியான சூழலில், தமிழக போலீசிடம் உதவி கேட்போம். அந்த எல்லைக்குள் வரும் காவல் நிலையத்தின் துணை அல்லது உதவி கமிஷனர்களிடம் எழுத்துப்பூர்வமாக உதவி கேட்கப்படும். தற்போது, அரசியல் புள்ளிகள் சிலர், கடத்தலில் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். இதனால், மாநில போலீசார் ஒத்துழைக்க தயங்குகின்றனர். வேறு வழியின்றி, விசாரணையை தள்ளிப்போடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.