டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கிய முதியவரை மீட்ட சைபர் கிரைம் போலீஸ்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடியில் சிக்கிய முதியவரை, தமிழக சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர்.இதுகுறித்து, தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:
சைபர் கிரைம் விசாரணை மையம் மற்றும் உளவுத்துறை கண்காணிப்பு வாயிலாக, கர்நாடகாவில் வசிக்கும் முதியவர் ஒருவர், 'டிஜிட்டல்' கைது பிடியில் சிக்கியிருப்பது தெரியவந்தது. டிஜிட்டல் கைதுக்கான பொய்யான காரணங்களை கூறி, அவரிடம் மர்ம கும்பல் பணம் கேட்டு மிரட்டியதும் கண்டறியப்பட்டது.இதில் தொடர்புடைய மோசடி கும்பலின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து வந்த புகார்களுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் நடந்த பணப் பரிவர்த்தனையில் ஒன்று மஹாராஷ்டிராவிலும், மற்றொன்று, கர்நாடகாவில் கோடீஸ்வரரான முதியவரின் வங்கி கணக்கோடும் சம்பந்தப்பட்டிருந்தது. மோசடிக்காரர்களின் டிஜிட்டல் கைது பொய்யை நம்பியதால், முதியவர் போலீசில் புகார் அளிக்காமல், அவர்களின் பிடியில் இருப்பது தெரியவந்தது. பின், தமிழக சைபர் கிரைம் போலீசார், கர்நாடக சைபர் கிரைம் போலீசாருக்கு, பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை அளித்து அவரை மீட்க உதவினர். இதன் வாயிலாக, அவருக்கு ஏற்பட இருந்த நிதி இழப்பு தடுக்கப்பட்டுஉள்ளது.டிஜிட்டல் கைது என யாராவது மிரட்டி பணம் கேட்டால், '1930' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.