சென்னை: ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பொது மக்கள் அனுப்பும் மனுக்களை பிரிக்கும் நிலையிலேயே, பொது தகவல் அலுவலர்கள் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு நிர்வாகத்தின் நடைமுறைகளை, பொதுமக்கள் அறிந்து கொள்ள, தகவல் அறியும் உரிமை சட்டம், 2015ல் அமலானது. பதில் தர வேண்டும்
இதன்படி, பொதுமக்கள் தகவல் கேட்டு அனுப்பும் மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்கள், 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு அரசு துறை அலுவலகத்திலும், பொது தகவல் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். அவர், தகவல் கோரி வரும் மனுக்களை வரிசைப்படுத்தி, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர் வாயிலாக, பதில்களை பெற்று மனுதாரருக்கு அனுப்புவார்.இதன்படி, பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உட்பட பல்வேறு துறைகளில் பிரிவு வாரியாக, பொது தகவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பொது மக்களிடம் இருந்து வரும் மனுக்களை, சம்பந்தப்பட்ட பிரிவு பொது தகவல் அலுவலருக்கு அனுப்பி, பதில் பெற்று அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஒருங்கிணைப்பு இல்லை
இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பி. கல்யாணசுந்தரம் கூறியதாவது: அரசு துறை அலுவலகங்களில், பிரிவு வாரியாக பொது தகவல் அலுவலர்கள் நியமித்தது நல்ல விஷயம். ஆனால், குறிப்பிட்ட சில தகவல் கேட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கான பொது அலுவலர் என்று குறிப்பிட்டு, பொதுமக்கள் மனுக்களை அனுப்புவர். அதை பெறும், துறையின் பிரதான பொது தகவல் அலுவலர், சம்பந்தப்பட்ட பிரிவு பொது தகவல் அலுவலருக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். ஆனால், அதிகாரிகளிடம் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு செல்ல, 10 முதல், 15 நாட்கள் வரை தாமதமாகிறது. சில சமயங்களில், பதில் அளிப்பதற்கான, 30 நாள் அவகாசம் முடியும் போது தான், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் மனு செல்கிறது. இதை சரி செய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தகவல் ஆணையத்தில் முறையிட்டு இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.