சென்னை: ஒரு பகுதியில், டெங்கு பாதிப்பு மூன்று பேருக்கு மேல் கண்டறியப்பட்டால், அப்பகுதி களப்பணியாளர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள், மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. மாநிலம் முழுதும் இதுவரை, 17,000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழை தொடர்வதால், வரும் ஜனவரி வரை டெங்கு தாக்கம் அதிகமாக இருக்கும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், 23,000க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள், களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வீடுகள், பொது இடங்களில், 'ஏடிஸ்' வகை கொசு உருவாக்கத்தை கண்டறிந்து, இவர்கள் அழித்து வருகின்றனர். மேலும், டெங்கு பாதிக்கப்படும் பகுதிகளில், கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்துகின்றனர். இந்நிலையில், ஒரு பகுதி அல்லது கிராமத்தில், ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு மேல் டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், அப்பகுதி களப்பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி உட்பட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில், கொசு ஒழிப்பு பணியை முறையாக செய்யாத களப்பணியாளர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் மற்றும் ஒருநாள் சம்பளம் ரத்து என, தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
டெங்கு உயிரிழப்பை தடுக்கவும், பாதிப்பை கட்டுப்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது விபரம் சம்பந்தப்பட்ட களப்பணியாளர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அவர் முறையாக சிகி ச்சை பெறுவதை உறுதிப்படுத்துவதுடன், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதும் அவசியம். இப்பணிகளை முறை யாக செய்யாத களப்பணியாளர்களுக்கு, 200 ரூபாய் அபராதம், ஒருநாள் ஊதியம் ரத்து போன்ற தண்டனையை அந்தந்த சுகாதார அதிகாரிகள், வழங்குகின்றனர். குறிப்பாக, ஒரு பகுதியில் மூன்று பேருக்கு மே ல் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த பகுதியைச் சேர்ந்த களப்பணியாளருக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.