உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.100 கோடியை கோர்ட்டில் செலுத்துங்க தேவநாதனுக்கு நிபந்தனையுடன் ஜாமின்

ரூ.100 கோடியை கோர்ட்டில் செலுத்துங்க தேவநாதனுக்கு நிபந்தனையுடன் ஜாமின்

சென்னை : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனுக்கு, 100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குநர் தேவநாதன், அவரது கூட்டாளிகள் குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமைநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஆகியோர் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், தேவநாதன் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி தேவநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதி ஜி.ஜெயசந்திரன் விசாரித்தார். விசாரணை முடிவில், அவர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் ஓராண்டுக்கு முன் கைது செய்யப்பட்டார். இன்று வரை 'டிபாசிட்' செய்யப்பட்ட பணத்தில், ஒரு பகுதியை கூட முதலீட்டாளர்கள் பெற முடியாத நிலையில் உள்ளதை, நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. எனவே, மனுதாரருக்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் அதே தொகைக்கு, இரு நபர் உத்தரவாதத்தில், அக்., 30ம் தேதி வரை நிபந்தனை இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. பாஸ்போர்ட்டை, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில் ஒப் படைக்க வேண்டும். அக்., 30ம் தேதி அல்லது அதற்கு முன், 100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் 'டிபாசிட்' செய்ய வேண்டும். ஒவ்வொரு திங்கள் கிழமையும், விசாரணை நீதிமன்றத்தில் காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். சொத்துக்களை விற்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இதற்கான அனுமதியை, விசாரணை நீதிமன்றத்தில் பெற வேண்டும். இது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அக்., 31ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natchimuthu Chithiraisamy
செப் 16, 2025 15:59

நிறுவனம் பெயர் ஹிந்து அறபித்தவர்கள் கிருத்துவர்கள் போல் தெரிகிறது முதலீட்டாளர்கள் ஒருவர் கூட கிறிஸ்துவர் இருக்க மாட்டார்


Krishnamurthy Venkatesan
செப் 16, 2025 13:23

100 கோடியை டெபாசிட் செய்ய முடியும் எனில் 24.50 கோடியை முதலீட்டாளர்களுக்கு திருப்பி தர முடியுமே?


முக்கிய வீடியோ