சென்னை: ''கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால், பல்கலை வேந்தர் நியமனம் தொடர்பான சட்ட மசோதாக்களை, ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பினேன்,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.'தமிழ் ஜனம்' செய்தி தொலைக்காட்சிக்கு, அவர் அளித்த பேட்டி: கவர்னர் என்பவர் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய பிரதிநிதி. சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்கலாம். அல்லது மேலும் விபரங்கள் கேட்டு, மறு பரிசீலனைக்கு அனுப்பலாம். ஜனாதிபதியின் அனுமதி அல்லது ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பலாம். நிதி மசோதாவாக இருந்தால், அதற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர, கவர்னருக்கு வேறு வழியில்லை. இவைதான் அரசியலமைப்பு சட்டம் கூறும் வழிமுறைகள். நான் பதவியேற்ற மூன்று மாதங்களில், என்னிடம் வந்த மசோதாக்களில், 80 சதவீத மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறேன். ஒரே வாரத்தில், 60 சதவீத மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறேன். 13 சதவீத மசோதாக்களை, ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். ஒரு மசோதாவின் பரிந்துரைகளை, ஏற்கனவே பார்லிமென்ட் சட்டமாக இயற்றி இருந்தால், அந்த மசோதா குறித்து முடிவு எடுக்க வேண்டிய உரிமை, பார்லிமென்டிற்கு மட்டுமே உள்ளது. எனவே, ஜனாதிபதியின் அனுமதியுடன் தான் முடிவு செய்ய முடியும். தமிழக பல்கலைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்க வேண்டும் என்பதால், துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினேன். இதை விரும்பாத அரசு, வேந்தர் பதவியிலிருந்து, கவர்னரை நீக்க சட்ட மசோதா கொண்டு வந்தது.விஷமத்தனமானது
கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. மத்திய அரசின் அதிகார எல்லைக்குள், மாநில அரசு நுழைய முடியாது. எனவே அந்த மசோதாக்கள், ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பப்பட்டன. உண்மை இப்படி இருக்கும்போது, எல்லா மசோதாக்களையும் நிறுத்தி வைத்திருக்கிறேன் என, குற்றம் சாட்டுவது விஷமத்தனமானது. மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலருடன், முதல்வர் ஸ்டாலின் என்னை சந்தித்து, பல்கலை சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரினர்.'இது நீதிமன்றத்தில் நிற்காது' என்றேன். அப்போது ஒரு அமைச்சர், 'அப்படியா' என வியப்புடன், தலைமைச் செயலரிடம் கேட்டார். அவரும், 'ஆமாம்' என்றார். அதன் பின்னரும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, முதல்வர் வலியுறுத்தினார்.தமிழகத்தில் பட்டியலின மக்கள், காலணி அணிந்து, சில தெருக்கள் வழியே செல்லும்போது தாக்கப்படுவதாக, செய்திகள் வருகின்றன. ஒரு பள்ளியில், தலித்துகளை தனிமைப்படுத்த, நான்கடி சுவர் எழுப்பி உள்ளனர். நான் அந்த பள்ளிக்கு வருகிறேன் என்றதும், அவசரமாக அந்த சுவர் இடித்து தள்ளப்பட்டது. தமிழக மக்கள் சனாதன சிந்தனைகளில் திளைத்தவர்கள். நமது நாட்டின் அடித்தளம் சனாதானம்தான். இவ்வாறு அவர் கூறினார்.