திருச்சி: தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலா வாங்கிய தியேட்டரில் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியை சேர்ந்த அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், 2012ல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. புலனாய்வு குழு இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., -- சி.பி.ஐ., ஆகியோர் விசாரித்தும், கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. தற்போது அந்த குழுவுக்கு, சி.பி.சி.ஐ.டி., -- டி.ஜ.ஜி., வருண்குமார் தலைமை வகித்து, தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். இரு மாதங்களாக, பல ரவுடிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. நெல்லை, புழல் சிறைகளில் ரவுடிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை, 6:30 மணியளவில் திருச்சி, பாலக்கரை பகுதியில் உள்ள காவேரி தியேட்டருக்கு, டி.ஐ.ஜி., வருண்குமார் தலைமையில், இரு வாகனங்களில் சிறப்பு புலனாய்வு குழுவினர் வந்தனர். அவர்கள், தியேட்டரில் ஆய்வு செய்து, அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இரண்டு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடந்தது. இந்த தியேட்டர், 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சசிகலா குடும்பத்தை சேர்ந்த நபரால், 'ஜாக்ஸ் சினிமா' என்ற நிறுவனம் பெயரில் வாங்கப்பட்டது. பரபரப்பு தற்போதும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தியேட்டரை, மோகனரங்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவதாக தெரிகிறது. ராமஜெயத்தை கொலை செய்தவர்கள் தொடர்பான விசாரணை, சசிகலா குடும்பத்தினர் தியேட்டரில் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.