உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர்களை சுண்டி இழுக்கும், "பிரண்ட்ஸ் சோன்: தவறான பாதை காட்டும் மொபைல் நிறுவனங்கள்

இளைஞர்களை சுண்டி இழுக்கும், "பிரண்ட்ஸ் சோன்: தவறான பாதை காட்டும் மொபைல் நிறுவனங்கள்

சென்னை : தவறான உறவுகளுக்கு வழிவகுக்கும், பிரபல தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்களின்,'பிரண்ட்ஸ் சோன்' எனும், மதிப்பு கூட்டு வசதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 'ஹாய்! நான் தான் ஸ்ரேயா பேசுறேன்; பார்க்க ரொம்ப அழகா, அம்சமா இருப்பேன். ஆனாலும், தனிமை என்னை வாட்டுது; என்னோட எண்ணங்களை பகிர்ந்துக்க எனக்கு நண்பர்களே இல்லை. நீங்க என்னோட, 'பிரண்ட்' ஆகறீங்களா?' இப்படி துவங்கி, 'இவரோட நீங்கள் பேச விரும்பினால், உங்கள் மொபைலில் எண் ஒன்றை அழுத்தவும்; இதே போன்ற எண்ணம் உள்ள மற்றொரு நண்பருடன் பேச எண் இரண்டை அழுத்தவும்...' என,தொடர்கிறது, பிரபல தனியார் மொபைல்போன் சேவை நிறுவனம் ஒன்றின் அந்த விளம்பர அழைப்பு. 'பிரண்ட்ஸ் சோன்' என்ற பெயரில் வழங்கப்படும் இவ்வசதியில் இணையும் சபல புத்திக்காரர்களுக்கு, 12 இலக்க எண் (இடச்t ஐஞீ) ஒதுக்கப்படுகிறது. இந்த எண் தரப்பட்டதும், அவர்களின் மொபைல்போனுக்கு, 'பிரண்ட்ஸ் சோனில்' பேச அழைப்பு விடுத்து, எஸ்.எம்.எஸ்., க்கள்,'மிஸ்டு கால்'கள் வர துவங்குகின்றன. தங்கள் மொபைல்போனிலிருந்து, முகம் தெரியாத பெண் அல்லது ஆணுடன் பேச, மாதக் கட்டணம் 30 ரூபாய், நிமிடத்திற்கு இரண்டு ரூபாய் செலவாகும் என தெரிந்தும், 'பிரண்ட்ஸ் சோன்' வசதிக்கு, கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது கசப்பான உண்மை. பாதுகாப்பு காரணங்கள் எனக் கூறி, இவ்வசதியில் இணைவோருக்கு அவர்களுக்கான, 'சாட் ஐ.டி.,' தெரிவிக்கப்படாததும், ஒருவரின் மொபைல் எண், மற்றொருவருக்கு தெரியாதபடி, 'சாட் ஐ.டி.,' மூலமே, அவர்களை பேச வைத்து காசு பார்ப்பதும், மொபைல்போன் சேவை நிறுவனங்களின் சாமர்த்தியம். தேர்வுத்தாளில், 'டம்மி நம்பர்' கொடுப்பதைப் போல் இந்த வசதி செய்யப்படுகிறது. ஆனால், உரிய அனுமதியின்றி, 'பிரண்ட்ஸ் சோனில்' தாங்கள் இணைக்கப்படுவதாகவும், இதனால், தங்களுக்கு நண்பகல், நள்ளிரவு என, நேரம், காலமின்றி தேவையற்ற அழைப்புகள் வருவதாகவும், பிரபல தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பலர் புலம்புகின்றனர். தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் இதுபோன்ற வசதிகளுக்கு, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, பிரபல மொபைல்போன் சேவை நிறுவன வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, ''சமீபகாலமாக என் மொபைலுக்கு, '57000' என ஆரம்பிக்கும் 12 இலக்க எண்களிலிருந்து அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்போர், 'இது பிரண்ட்ஸ் சோனா?' என கேட்கின்றனர். அவர்களின் மொபைல் எண் தெரியாததால் போலீசில் புகார் செய்ய முடிவதில்லை. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மொபைல்போன் சேவை நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டாலும் சரியான பதில் கிடைப்பதில்லை. சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் இதுபோன்ற வசதிகளை உடனே தடை செய்யப்பட வேண்டும்,'' என்றார். சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த மொபைல்போன் சில்லரை வியாபாரி கோபிநாத் கூறும்போது, ''உங்களுக்கு,'டேட்டிங்' போக விருப்பமா? இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்' என, பத்திரிகைகளிலேயே இப்போது விளம்பரம் வருகிறது. எதிர்பாலினருடன் ஒரு ரகசிய உறவை ஏற்படுத்திக் கொள்வதில் மனிதர்கள் எப்போதும் ஆர்வமாக உள்ளனர். மனித மனதின் இந்த பலவீனத்தை மொபைல்போன் சேவை நிறுவனங்கள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. தங்கள் பணத்தை மொபைல்போன் சேவை நிறுவனங்கள் தேவையற்ற வழிகளில் சுரண்டுகின்றன என்ற விழிப்புணர்வு, வாடிக்கையாளர் மத்தியில் வர வேண்டும். அப்போது தான் இதுபோன்ற தவறுகள் குறையும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி