சென்னை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை நகரில், விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் சார்பில், 1,300 பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைப்பதற்கு, போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பாதுகாப்பு பணியில், 5,000 போலீசார் ஈடுபட உள்ளனர். சென்னையில், இந்து முன்னணி, பா.ஜ., இந்து மக்கள் கட்சி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், நகரின் முக்கிய இடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இன்று, பிரதிஷ்டை செய்யப்பட உள்ள விநாயகர் சிலைகள், ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை கடற்கரை, காசிமேடு மற்றும் எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கரைக்கப்பட உள்ளன. ஊர்வலமாக கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க, ஒவ்வொரு பிரிவினருக்கும், பல்வேறு நேரம், போலீசார் ஒதுக்கியுள்ளனர். சென்னையில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு கூடுதலாக விநாயகர் சிலைகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல, கோவையிலும், கூடுதலாக விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளன. தூத்துக்குடி, ஈரோடு மற்றும் தாளவாடி பகுதியில் மட்டும் கூடுதலாக கேட்கப்பட்ட இடங்கள் ஒதுக்கப்படவில்லை.அசம்பாவித சம்பவம் ஏற்படாமலிருக்க, விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணயில், 5,000 போலீசார் ஈடுபட உள்ளனர்.