திருச்சி : கொலைமுயற்சி வழக்கில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணனுடன் கைதான அவரது உதவியாளர், மருத்துவமனையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்செந்தூர் தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன். இவர் ஏற்கனவே, அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். தூத்துக்குடி அடுத்துள்ள ஆறுமுகநேரி, தி.மு.க., நகர செயலர் சுரேஷ் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வையும், அவரது உதவியாளர் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஆல்நாத், 32, என்பவரையும், போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், கடந்த 11ம் தேதி முதல், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு, 1.30 மணியளவில், ஆல்நாத், திடீரென, நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து அவரை, போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு ரகு, கேப்ரியேல், நெப்போலியன் ஆகிய மூன்று சிறைத்துறை போலீசார், பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.நேற்று காலை 11 மணியளவில், 'பாத்ரூம்' போகவேண்டும் என்று ஆல்நாத் கூறினார். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த ரகு என்ற போலீஸ்காரர், அவருடன் பாத்ரூம் வரை சென்றார். திடீரென, பாத்ரூம் அருகேயிருந்த அறைக்குள், போலீஸ்காரர் ரகுவை தள்ளிய ஆல்நாத், மருத்துவமனையிலிருந்து வெளியே ஓடி, காம்பவுண்ட் சுவர் ஏறி, தப்பிவிட்டார். போலீசார் துரத்தியபோதும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) மஹாலி தலைமையில் போலீசார், மருத்துவமனைக்கு வந்து, தேடுதல் பணியை முடுக்கி விட்டனர். திருச்சி ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். எனினும், ஆல்நாத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.