உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வரிடமிருந்து தப்பிக்க அவசர கதியில் மனுக்கள் டிஸ்போஸ்

துணை முதல்வரிடமிருந்து தப்பிக்க அவசர கதியில் மனுக்கள் டிஸ்போஸ்

திருப்பூர்:துணை முதல்வர் உதயநிதியின் ஆய்வில் இருந்து தப்பிப்பதற்காக, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள், நிலுவை மனுக்கள் ஏராளமானவற்றைத் தள்ளுபடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த, 19ம் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வுக்கூட்டம் நடத்தினார். முன்னதாக, சென்னையிலிருந்து வந்த குழுவினர், மாவட்டம் முழுவதும் மக்களை நேரடியாக சந்தித்தும், கள ஆய்வுகள் நடத்தியும், அறிக்கை தயாரித்து, துணை முதல்வரிடம் அளித்திருந்தனர். சுதாரித்துக்கொண்ட திருப்பூர் மாவட்ட அதிகாரிகள், நிலுவை மனுக்கள் அதிகளவில் வைத்திருந்தால், உதயநிதியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என கருதி, மாத கணக்கில் நிலுவையில் இருந்த ஏராளமான மனுக்களை தள்ளுபடி செய்து விட்டனர். இதனால், மனு அளித்த மக்கள் விரக்தி அடைந்தனர். திருப்பூரை சேர்ந்த சரவணன் என்பவர், பொது பிரச்னைகள் தொடர்பாக, 2021 முதல் இம்மாதம் வரை வழங்கியிருந்த 27 மனுக்களுக்கு, உதயநிதியின் ஆய்வு காரணமாக, அவசர கதியில் முடித்து வைத்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

90,271 மனுக்கள் ரிஜெக்ட்!

கடந்த 2021 மே 7ம் தேதி முதல் நடப்பாண்டு டிச., 16ம் தேதி வரை, திருப்பூர் மாவட்டத்தில் 'முதல்வரின் முகவரி'க்கு, 3 லட்சத்து 5 ஆயிரத்து 478 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தது. இவற்றில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 285 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 90,271 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், மொத்தமாக 1,992 மனுக்கள் மட்டுமே நிலுவையில் இருப்பதாக துணை முதல்வருக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கேட்டபோது, ''மக்களின் மனுக்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறுதலாக மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், மீண்டும் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமாரராஜா கூறுகையில், ''துணை முதல்வர் உதயநிதியின் வருகைக்கு ஒரு வாரத்துக்கு முன், பல்வேறு துறை சார்ந்த, 400 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கலெக்டர் உத்தரவுப்படி, அந்த, 400 மனுக்கள் மீதும் உரிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அந்த மனுக்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கே திருப்பி அனுப்பி தீர்வு காணப்படும். எந்த மனுக்களையும் அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது,'' என்றார்.

தி.மு.க., ஆதரவு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு, மாநில இணை பொது செயலர் சரவணன் கூறியதாவது:

கடந்த, 2021ம் ஆண்டு முதல் இம்மாதம் வரை, நான் அளித்த ஏராளமான மனுக்கள், திருப்பூர் மாநகராட்சி, போக்குவரத்து, மின்வாரியம், உணவு பாதுகாப்பு உள்பட பல்வேறு துறையினரிடம் நிலுவையில் உள்ளன. துணை முதல்வர் உதயநிதி கடந்த, 19ம் தேதி திருப்பூரில் ஆய்வுக்கு வந்த நிலையில், மாதக் கணக்கில் நிலுவையிலுள்ளவற்றில், 14, 15, 16 ஆகிய மூன்றே நாளில், 27 மனுக்களை முடித்து வைத்துள்ளனர். பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், எவ்வித காரணமும் குறிப்பிடாமல் அவசர கதியில் மனுக்களை நிராகரித்துள்ளர். சில மனுக்களை, ஏற்கப்பட்டது என குழப்பமான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து கடந்த, 23ம் தேதி நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை