கல்வியில் பின்தங்கிய நிலைக்கு தமிழகத்தை தள்ளிய தி.மு.க.,
சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட, மிகவும் அதிகரித்து இருப்பதாக, மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தை கல்வித்துறையில், மிகவும் பின் தங்கிய நிலைக்கு தி.மு.க., அரசு தள்ளியுள்ளது. கடந்த, 2020 - 21ல் துவக்கப் பள்ளியில், 0.6 சதவீதமாக இருந்த இடைநிற்றல் விகிதம், 2024 - 25ல், 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயர் நிலைப் பள்ளிகளில், இடை நிற்றல் விகிதம் 6.40 சதவீதத்தில் இருந்து, 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும், மும்மொழி கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில், நடக்காத ஜாதிய மோதல்கள், அரசு பள்ளிகளில் நடக்கின்றன. ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும் தி.மு.க., ஆட்சியில் நடக்கிறது. தமிழகத்தில், 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருக்கிறார். வீண் விளம்பரம் செய்து, தங்களுக்கு தாங்களே பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கும் முதல்வரும், அமைச்சரும் எப்போது விழித்து கொள்வர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.