மாஜி அமைச்சர் வேலுமணி மீது வழக்கு தி.மு.க., அரசுக்கு பழனிசாமி கண்டனம்
சென்னை:அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை:முன்னாள் அமைச்சர் வேலுமணி, சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட பலர் மீது, தனியார் அமைப்பு அனுப்பிய, ஆதாரமற்ற புகார் அடிப்படையில், தி.மு.க., அரசு, லஞ்ச ஒழிப்பு துறை வழியே வழக்கு பதிவு செய்துள்ளது.தி.மு.க., அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஊழல் வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், 2021 ஆட்சி மாற்றத்திற்கு பின், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அந்தர் பல்டி அடித்தது. இதை பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக, அந்த வழக்குகளை மீண்டும் விசாரித்து வருகிறது. இதிலிருந்த அந்தத் துறை எப்படி செயல்படுகிறது என்பதை அறியலாம்.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சி வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதை அனைவரும் பாராட்டினர். சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக, அரும்பாடுபட்ட மாநகராட்சி பொறியாளர்களின் பெயர்களும், முதற்கட்ட தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.இதுபோன்ற வழக்குகளால், அரசு அதிகாரிகள் மத்தியில் ஒரு தொய்வு ஏற்படும். தி.மு.க., அரசின் மீது கோபத்தின் உச்சியில் இருக்கும், தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப, முதல்வர் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி விட்டிருக்கிறார். இதனால், எங்கள் செயல்களை தடுத்து நிறுத்தி விடலாம்; போதைப் பொருட்கள் கடத்தல் கேந்திரமாக திகழ்வதை, மக்களிடம் இருந்து மறைத்து விடலாம் என, ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார். தி.மு.க., ஆட்சி காலம் இன்னும் 19 அமாவாசைகள்தான். நாட்கள் எண்ணப்படுகின்றன. தி.மு.க., அரசின் சவாலை சட்டப்படி எதிர்கொள்ள, அ.தி.மு.க., எப்போதும் தயார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.