சென்னை:படிக்க வைப்பதாக ஆசை காட்டி, வீட்டு வேலைக்கு அமர்த்தி, இளம் பெண் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக, பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன், மருமகள் மீதான குற்றச்சாட்டு குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவர்.நான்கு ஆண்டுகளுக்கு முன் மும்பை சென்ற இவர், வீடு திரும்பவில்லை. அறிமுகம்
இவரது மனைவி செல்வி, 38. சென்னை அருகே, கேளம்பாக்கத்தில் வீட்டு வேலை செய்கிறார். இவர்களது, 18 வயது மகள், பிளஸ் 2 முடித்துள்ளார்.'நீட்' தேர்வில் வெற்றி பெற்று, டாக்டராக வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். அதற்கு, குடும்ப வறுமை ஒத்துழைக்கவில்லை. செல்விக்கு மே மாதம், சித்ரா என்பவர் வாயிலாக, சென்னை, திருவான்மியூர், சவுத் அவென்யூ பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆன்ட்ரோ, 35, மார்லினா, 31, ஆகியோரின் அறிமுகம் கிடைத்து உள்ளது.இவர்கள் பல்லாவரம் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன், மருமகள் ஆவர். இருவரும், 'உங்கள் மகளை நாங்கள் டாக்டராக்கி காட்டுகிறோம். படிப்புக்கான நேரம் போக, மீதி நேரத்தில் என் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலை செய்யட்டும். அதற்கு சம்பளம் தருகிறோம்' என, ஆன்ட்ரோ கூறியுள்ளார். இவர்களை நம்பி, தன் மகளை செல்வி ஒப்படைத்தார். விசாரணை
ஆனால், படிக்க வைக்காமல், வீட்டு வேலை மட்டும் செய்ய வைத்துள்ளனர். சம்பளம் கொடுக்காததால், ஜூலை மாதமே அந்த பெண், 'எனக்கு வீட்டு வேலை செய்ய விருப்பம் இல்லை' என கூறியுள்ளார். ஆனால், ஆன்ட்ரோ மற்றும் மார்லினா ஆகியோர் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வேலை வாங்கி உள்ளனர். முகம், கை, முதுகு பகுதியில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.அந்த பெண்ணை, ஜூலை, 15ல், சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனர். மகளின் உடலில் இருக்கும் காயத்தை பார்த்து, தாய் செல்வி, உளுந்துார் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.வெளிநோயாளியாக சிகிச்சை அளித்த டாக்டர்கள், இளம் பெண்ணின் உடலில் இருக்கும் காயங்கள் பற்றி, சென்னை நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.போலீசார் கூறுகையில், 'மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். எழுத்துப்பூர்வமாக எங்களிடம் எவ்வித புகாரும் தரப்படவில்லை' என்றனர்.இதற்கிடையே, திருநறுங்குன்றம் கிராம தலைவர்கள் முன்னிலையில், புகார் கொடுக்காமல் இருக்க பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், பெண்ணின் உறவினர்களிடம் பேசி, காவல் நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ செல்ல விடாமல் தடுப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக தெரிய வருகிறது.
அதிகார திமிர்: அண்ணாமலை கடுப்பு
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:சென்னை, பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் வீட்டில், 18 வயது பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். எம்.எல்.ஏ., மகன் மற்றும் மருமகளால் கடுமையாக தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டுள்ளார். மருத்துவ கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்ப சூழல் காரணமாகவும், வீட்டு வேலை செய்த இளம் பெண்ணை, இத்தனை கொடூரமாக தாக்கி இருப்பது, தி.மு.க., என்ற அதிகார திமிரையே காட்டுகிறது. மாதம், 16,000 சம்பளம் என, கூறிவிட்டு, 5,000 மட்டுமே, இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கின்றனர் என, தெரிய வருகிறது. குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.