55 மாவட்ட தலைவர்களுக்கு தமிழக காங்கிரசில் கல்தா?
தமிழக காங்கிரசில், செயல்படாத மாவட்டத் தலைவர்கள்; 65 வயதுக்கும் மேற்பட்ட தலைவர்கள் என்ற அடிப்படையில், 55 மாவட்டத் தலைவர்களுக்கு, 'கல்தா' கொடுக்க, பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவது, மாவட்டத் தலைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும், மாவட்ட காங்கிரஸ் குழுவை அதிகாரப்படுத்தும் பணிகளை, காங்கிரஸ் டில்லி மேலிடம் துவக்கி உள்ளது. சீரமைப்பு
தமிழக காங்கிரஸ் கட்டமைப்பை சீரமைக்கும் விதமாக, கிராம காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழக காங்கிரசில், அமைப்பு ரீதியாக மொத்தம் 77 மாவட்டங்கள் உள்ளன. இதில், 11 மாவட்டத்தில் தலைவர் பதவி காலியாக உள்ளன. இவற்றில், ஈரோடு மாநகர், தர்மபுரி மாவட்டங்களுக்கு, பொறுப்பாளர்கள் உள்ளனர்.மீதமுள்ள சென்னை, மத்திய சென்னை மேற்கு, தென்சென்னை மேற்கு, காஞ்சிபுரம், துாத்துக்குடி வடக்கு என, ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும், காலியாக உள்ள மாவட்டங்களுக்கு, மாவட்டத் தலைவர்கள் போட வேண்டும் என, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கோஷ்டி தலைவர்கள் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.அதேபோல், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், சரியாக செயல்படாமல், கோஷ்டி அரசியல் செய்து வருவோர் என, 55 மாவட்டத் தலைவர்களை மாற்ற, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. கிராம காங்கிரஸ் கமிட்டி வாயிலாக, மாவட்டத்திற்கு தலா மூன்று பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கிராம கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட வாரியாக தயாரித்த பட்டியலை, தமிழக காங்கிரஸ் தலைமையிடம் ஒப்படைத்து வருகின்றனர்.இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களிடம், நேர்காணல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. டில்லி மேலிடத்திற்கு, தமிழக காங்கிரஸ் தரப்பில் அனுப்பி வைக்கும் பட்டியலில், கோஷ்டி தலைவர்கள் அனைவரும், தங்களின் ஆதரவாளர்களுக்கு தலைவர் பதவி பெற்று தரும் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.இதற்கிடையில், அதிருப்தி மாவட்டத் தலைவர்கள் 35 பேர், தங்கள் பதவிக்கு சிக்கல் வருவதால், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அவர்கள் தங்களுக்கு வேண்டிய கோஷ்டி தலைவர்கள் வாயிலாக, பதவியை தக்க வைக்க, டில்லி செல்ல திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து அதிருப்தி மாவட்டத் தலைவர்கள் சிலர் கூறியதாவது:
தமிழக காங்கிரசில் காலியாக உள்ள மாவட்டங்களில், தலைவர் பதவியை நியமிக்கிறோம் என்ற அடிப்படையில், எங்கள் பதவியை பறிக்க திட்டமிட்டுள்ளனர். போட்டி அதிகரிப்பு
நாங்கள் கட்சி பணிகளை சரிவர செய்துள்ளோம் என்பதை, கட்சி மேலிடத்திற்கு ஆதாரப்பூர்வமாக தெரிவிக்க, டில்லி செல்ல இருக்கிறோம்.குஜராத் பார்முலா அடிப்படையில், மாவட்டத் தலைவர்களுக்கு, கூடுதல் அதிகாரம் இனிமேல் கிடைக்க இருக்கிறது.சட்டசபை, லோக்சபா தேர்தலில், வேட்பாளர்கள் தேர்வு செய்யும் இடத்தில், மாவட்டத் தலைவர்கள் இடம் பெற உள்ளதால், அப்பதவிக்கு போட்டி அதிகரித்துள்ளது. எனவே, பதவியை தக்கவைக்க போராட வேண்டியிருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -