சிறப்பு திருத்த பணியை கடைபிடிக்க மாட்டேன் என சொல்ல ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா: பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கேள்வி
சிவகங்கை: ''தேர்தல் கமிஷன் நடத்தும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கடைபிடிக்க மாட்டேன் என சொல்ல தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா,'' என, சிவகங்கையில் நடந்த வந்தே மாதரம் 150 ம் ஆண்டு நிகழ்வில் பங்கேற்ற பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார். அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் மனதின் குரலில் 150 ம் ஆண்டு வந்தே மாதரம் நிகழ்வு மூலம் மக்களிடம் தேசபக்தி உறவை எழுச்சி பெற செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் பா.ஜ., சார்பில் 150 இடங்களிலும், தமிழகத்தில் சரித்திர புகழ்பெற்ற சிவகங்கை, வேலுார் உட்பட 7 இடங்களிலும் இந்நிகழ்ச்சி நடந்துள்ளது. பீகார் சட்டசபை தேர்தல் குறித்து அனைத்து கருத்து கணிப்பும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என கூறுகிறது. அதிலும் பா.ஜ., ஏற்கனவே வெற்றி பெற்ற 75 தொகுதிகளை விட, கூட்டணி ஒட்டு மொத்தமாக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு கூறுகிறது. பிரேசிலின் மாடல் அழகி படத்தை மாப் செய்து 22 முறை ஹரியானா தேர்தலில் ஓட்டளித்ததாக காங்., மூத்த தலைவர் ராகுல் பொய் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்மணியே நான் இந்தியா பக்கமே வந்ததில்லை, எப்படி ஓட்டளித்திருக்க முடியும் என மறுப்பு தெரிவித்து விட்டார். அந்தளவிற்கு பொய்யை காங்., மூத்த தலைவர் ராகுல் அவிழ்த்து விட்டார். இனி தமிழகத்தை தலைநிமிர விடமாட்டோம் என்ற நோக்கத்தில் தான் ராகுலும், ஸ்டாலினும் செயல்படுகின்றனர். சிவகங்கை எம்.பி., கார்த்தி 150 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கிய ஊழலில் சிக்கியவர். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும் ஊழலுக்காக திகார் சிறையில் 108 நாட்கள் இருந்தவர். எஸ்.ஐ.ஆர்., எனும் சிறப்பு தீவிர வாக்காளர் கணக்கெடுப்பு பணியை கடைபிடிக்க மாட்டேன் என சொல்லும் தைரியம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறதா. அவரது கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்தபோதே தேர்தல் கமிஷன் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என அபிடவிட் கொடுத்துள்ளனர். எனவே சிறப்பு திருத்த பணியில் உள்ள தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை மீறினால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகி விடும். தமிழகத்தில் 2002, 2025 ஆண்டு வாக்காளர் பட்டியலை எடுத்து கணக்கெடுப்பு பணியை தேர்தல் கமிஷன் சிறப்பாக செய்கிறது. ஊழல் என்றால் எந்த ஊழலை பெரிதாக சொல்வோம். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை தான். அந்தளவிற்கு ஊழலுக்கென்றே சிறப்பு பட்டயம் பெற்றவர் முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா என்றார்.