உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டட அனுமதி கட்டணம் ரூ.1,000 கோடி வசூல் டி.டி.சி.பி., சாதனை

கட்டட அனுமதி கட்டணம் ரூ.1,000 கோடி வசூல் டி.டி.சி.பி., சாதனை

சென்னை:'கட்டுமானத் திட்ட அனுமதி வழங்கும் பணிகளில், நடப்பு ஆண்டில் கட்டண வசூல், 1,000 கோடி ரூபாயை தாண்டும்' என, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் பொதுக்கட்டட விதிகளின் அடிப்படையில் கட்டுமானத் திட்டங்களுக்கு, டி.டி.சி.பி., ஒப்புதல் வழங்குகிறது. இதில், சென்னையில் உள்ள தலைமை அலுவலகம், மாவட்ட அலுவலகங்கள் வாயிலாக, கட்டுமானத் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து, உள்கட்டமைப்பு வசதி கட்டணம், கூடுதல் தளப்பரப்பு குறியீட்டு கட்டணம், வரன்முறை கட்டணம், திறந்தவெளி ஒதுக்கீட்டு கட்டணம், நில வகைப்பாடு மாற்ற கட்டணம் போன்ற தலைப்புகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்கள், வரி அல்லாத வருவாய் என்று, டி.டி.சி.பி.,யில் வகைப்படுத்தப்படுகின்றன. அதன்படி, முன் எப்போதும் இல்லாத வகையில், முதல் முறையாக, 2023 - 24ம் நிதி ஆண்டில், 940 கோடி ரூபாய் வசூலானது. இதுகுறித்து, டி.டி.சி.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை பெருநகருக்கு வெளியில், மாவட்டங்களில் பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்கள் அதிக எண்ணிக்கையில் வரத் துவங்கி உள்ளன. குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, ஓசூர் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் தொழில் சார்ந்த பெரிய கட்டுமானத் திட்டங்களின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த, 2022க்குப் பின் கட்டுமான திட்ட அனுமதி பணிகள் ஒற்றைச்சாளர முறைக்கு மாற்றப்பட்டதால், கோப்புகள் விரைவாக முடிக்கப்படுகின்றன. இதனால், கட்டண வசூல் விரைவுபடுத்தப்படுகிறது. இந்த காரணங்களால், கட்டுமான அனுமதி கட்டண வசூல் வெகுவாக உயர்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், இந்த வசூல், 1,000 கோடி ரூபாயை கடந்து விடும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் பிற மாவட்டங்களில், கட்டுமானத் துறை வளர்ச்சி அதிகரித்துள்ளது என்பதற்கு, இது குறியீடாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி