| ADDED : செப் 11, 2025 11:15 PM
கோவை; நமக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியில் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்கிற எண்ணத்தை தமிழக மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்; அதற்குரிய விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்சார தீர்வுகள் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கூறியதாவது: வீடுகளில் சோலார் பேனல் அமைக்க, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த சூரிய மின் சக்தி திட்டம் அமைக்க, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 6.5 சதவீத வட்டியில் கடனுதவி வழங்குகிறது. இது நமக்கு செலவு என்று கருதாமல், முதலீடு என்றே கருத வேண்டும். இரண்டு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க, 1.44 லட்சம் செலவாகிறது. இதில், 60 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. 3 கிலோ வாட் திறனுக்கு சோலார் பேனல் அமைக்க மொத்தம் ரூ.2 லட்சம் செலவாகும் என்ற நிலையில், அரசு மானியமாக ரூ.78 ஆயிரம் வழங்குகிறது. 2013ல், தமிழகத்தில் இதன் பயன்பாடு விரைவாக இருந்தது. அதன்பின், பொதுமக்கள் மத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில், மக்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். வீட்டுக்கான சோலார் பேனல்கள் அமைப்பதில், தமிழகத்தில், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. இதுகுறித்த விழிப்புணர்வை இன்னமும் மேம்படுத்த வேண்டும். தங்களுக்கு தேவையான மின்சாரத்தை, சோலார் வாயிலாக உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை, அனைவரிடமும் சேர்ப்பிக்க வேண்டும். அதேநேரம் சோலார் பண்ணைகள் அமைப்பதில், தமிழகம் இப்போதும் முன்னோடியாக விளங்குகிறது. இயற்கை தரும் வளங்களை வீணடிக்காமல், நமக்கு நாமே சில திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு, கூறினார்.