சென்னை: கோடை மின்தேவையை சமாளிக்க, 2,000 மெகாவாட் வரை மின்சாரம் வாங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழக மின்தேவை தினமும் சராசரியாக, 15,000 மெகாவாட்டாக உள்ளது. இது, கோடை காலத்தில் அதிகரிக்கிறது. அதன்படி, இந்தாண்டு மே, 2ல் மின் தேவை எப்போதும் இல்லாத வகையில், 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது.அதைவிட, அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மின் தேவை, 5 - 7 சதவீதம் கூடுதலாக அதிகரிக்கும் என்று, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி, மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம் வாங்கப்படுகிறது. வரும், 2025 கோடை மின் தேவையை சமாளிக்க, குறுகிய கால அடிப்படையில், மார்ச் 1 முதல் மே, 10 வரை மின்சாரம் வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 850 முதல், 2,000 மெகாவாட் வரை மின்சாரம் வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 800 மெகா வாட் திறனில், 'வட சென்னை - 3' அனல் மின் நிலையத்தை, தமிழக மின் வாரியம் அமைத்துள்ளது. இங்கு இந்தாண்டு மார்ச்சில் மின் உற்பத்தி துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் தினமும் சராசரியாக, 250 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஜூன் 27ல், 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின் தினமும், 500 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு அனல் மின் நிலையத்தில், சோதனை ரீதியான உற்பத்தி துவங்கிய பின், அதன் முழு திறனில், 72 மணி நேரம் தொடர்ந்து உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு பின் தான், வணிக ரீதியாக மின் உற்பத்தி துவங்கப்பட்டதாக அறிவிக்கப்படும். வடசென்னை 3 மின் நிலையத்தில், மார்ச்சில் உற்பத்தி துவங்கிய நிலையில், இன்னும் வணிக உற்பத்தி துவங்கப்படவில்லை. இந்த மின் நிலையத்தில், வணிக ரீதியிலான உற்பத்தி பணிகளை துரிதமாக முடித்து, வரும் டிசம்பர் இறுதிக்குள் முழு உற்பத்தியை துவக்குமாறு, அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.