அமைச்சர் பெரியசாமி, மகன், மகள் வீடுகளில் நள்ளிரவு வரை நீடித்த அமலாக்கத்துறை ரெய்டு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றும் மகள் இந்திராணிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் மில்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது சிக்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்று, ஆய்வு செய்து வருகின்றனர். திண்டுக்கல் துரைராஜ் நகரில் வசிக்கும் அமைச்சர் பெரியசாமி, வள்ளலார் நகரிலுள்ள அவரது மகள் இந்திராணி, மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செந்தில்குமார் வீடுகள், ஸ்பின்னிங் மில்கள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.எல்.ஏ., வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில், ஒரே நேரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மத்திய அரசின் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன், அமைச்சரின் வீட்டுக்குள் நேற்று முன்தினம் காலை 6:45 மணிக்கு சென்ற அதிகாரிகள், 11 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டு, மாலை 6:30 மணிக்கு நிறைவு செய்தனர். சோதனை சீலப்பாடியிலுள்ள மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றும் மகள் இந்திராணி வீடு, மில் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு தாண்டியும் சோதனை நீடித்தது. இச்சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பெட்டி பெட்டியாக மூன்று கார்களில் அதிகாரிகள் எடுத்து சென்றனர். வள்ளலார் நகரில் இந்திராணி வீட்டில் சோதனை முடிந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த இ.டி., அறிக்கையில் அவர் கையெழுத்திட மறுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால், அதிகாரிகள் சோதனையை நிறைவு செய்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, அங்கு அனைத்து நடைமுறைகளையும் முடித்துக் கொண்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். சோதனை குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமைச்சர் பெரியசாமியிடம் ஏற்கனவே 11 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருந்தோம். அதன் அடிப்படையில், அவரது மகன் மற்றும் மகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு சென்ற எங்களுக்கும், பாதுகாப்பு அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. ஆய்வு பெரியசாமி வீட்டில் பூட்டியிருந்த அறைகளில், எங்களால் சோதனை நடத்த முடியவில்லை. அவரது வீட்டில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. ஆனால், செந்தில்குமார், இந்திராணி ஆகியோரின் வீடு மற்றும் ஸ்பின்னிங் மில்லில், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கின. அவற்றை, 'ஸ்கேன்' செய்து டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றி உள்ளோம். வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன; அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். அமைச்சர் பெரியசாமி, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜாபர் சேட் உள்ளிட்டோருக்கு முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆவணம் கைப்பற்றப்பட்டது. முறைகேடு நடந்த காலகட்டத்தில், ஜாபர் சேட் மனைவிக்கும், வெளிநாட்டு நபர்களுக்கும், பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.