சென்னை: தேசிய அளவில், மழலையர் வகுப்புகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை, 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய கல்வி கொள்கையில், முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கான வயது 6 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால், நம்மாநிலத்தில் முதல் வகுப்பில் சேரும் வயது, 5 ஆக உள்ளது. இந்நிலையில், முதல் வகுப்பில் சேருவதற்கு முன், பிரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., எனும், மழலையர் வகுப்புகள் அல்லது பால்வாடிகா எனும் முன்பருவ கல்வி அல்லது அங்கன்வாடி வகுப்புகளில் குழந்தைகள் படிப்பது அதிகரித்துள்ளது. இந்த தகவல், மத்திய கல்வி அமைச்சகத்தின் கல்வி தளமான, 'யுடைஸ் பிளஸ்'சில் வெளியாகி உள்ளது. அதன்படி, 2023 -24ம் கல்வியாண்டில், நாட்டில், 1.87 கோடி குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்தனர். அவர்களில், 1.37 கோடி குழந்தைகள் முன்பருவ பள்ளிகளில் படித்திருந்தனர். அதாவது, மொத்த குழந்தைகளில், 73 சதவீதம் பேர் முன்பருவ பள்ளிகளில் படித்திருந்தனர். 2024 - 25ம் கல்வியாண்டில், 1.92 கோடி குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், 1.54 கோடி குழந்தைகள் முன் பருவ பள்ளிகளில் படித்திருந்தனர். இது, 80 சதவீதமாகும். முதல் வகுப்பு சேர்க்கை வயது உயர்த்தப் பட்டு உள்ளதால், முன்பருவ பள்ளிகளில் சேர்க்கும் வயதிலும் மாற்றம் ஏற்படும் என்பதால், குழந்தைகளின் மழலைத்தனம் பாதுகாக்கப்படும். அதேநேரம், மழலையர் வகுப்புகளுக்கான கல்வி, ஆசிரியர் கல்வியில் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், இந்த விபரம் எடுத்துரைக்கிறது.