திருப்பூர் நிறுவனங்களின் கடனை திருப்பி செலுத்த 6 மாத அவகாசம்; பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
சென்னை: அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் கடனை செலுத்துவதற்கு, 6 மாதம் அவகாசம் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதம்; தமிழகத்தின் மிக முக்கிய பொருளாதார முதுகெலும்புகளில் ஒன்றான திருப்பூர் பின்னலாடை மையம், தமிழகம் மட்டுமல்லாது, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் சுமார் 60 சதவீத பங்களிப்பை திருப்பூர் வழங்கி வருகிறது. இதன் மூலம் கணிசமான அளவில் வெளிநாட்டு செலாவணி ஈட்டித் தருகிறது. இருப்பினும், பருத்தி நூல் விலைகளின் ஏற்ற இறக்கமான நிலை மற்றும் உற்பத்தி செலவின் அதிகரிப்பு காரணமாக இந்தத் தொழில் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரி விதிப்பு, நமது ஏற்றுமதியாளர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது. அமெரிக்காவை தவிர்த்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவுபடுத்தும் மத்திய அரசின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். அதேவேளையில், உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகைகள்:திடீர் வரி உயர்வு காரணமாக ஏற்பட்ட போட்டித்திறன் இழப்பை ஈடுசெய்ய, நிவாரணம் அல்லது ஏற்றுமதி ஊக்கத் தொகைகள் வழங்க வேண்டும்.பருத்தி நூலின் வரி குறைப்பு:ஒட்டுமொத்த உற்பத்திச் செலவைக் குறைக்கும் விதமாக, பருத்தி நூலின் வரியில் தளர்வு அறிவிக்க வேண்டும். அப்போது தான், சர்வதேச சந்தைகளில் இந்திய பின்னல் ஆடைகள் போட்டித்தன்மையுடன் இருக்க முடியும்.கடன் தள்ளுபடி மற்றும் வட்டி நிவாரணம்:கடனை திருப்பிச் செலுத்துவதற்கு குறைந்தது 6 மாதங்கள் அவகாசம் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். இது சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கலை குறைக்கும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.