தலைவர்கள் சிலைகளை வைக்க சமத்துவ பூங்கா அமையுங்கள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை:'தலைவர்களின் சிலைகளை, ஒரே இடத்தில் வைக்க, சமத்துவப் பூங்காக்களை உருவாக்க வேண்டும்' என, அரசுக்கு ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் யோசனை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தஞ்சையில் அண்ணாதுரை சிலை மீது, தி.மு.க., - பா.ஜ., கொடிகளை சேர்த்து போர்த்தி சென்றுள்ளனர். தமிழகம் முழுதும் பொது இடங்களில் உள்ள தலைவர்களது சிலைகளை சேதப்படுத்துதல், அவமதித்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.இதனால், தலைவர்களின் சிலைகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது. பல தலைவர்கள் உயிரோடு இருந்தபோதும், சிறையில் இருந்தனர்; இறந்து சிலையான பின்னும், சிறையில் இருப்பதுபோல கம்பி வலைக்குள் இருப்பது வேதனை.பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும் அகற்ற, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுபோல, தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளையும் அகற்றி, ஒரே இடத்தில் வைக்க, தாலுகா அளவில், சமத்துவப் பூங்காவை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆட்சியில்...
* கடந்த 1978ல், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, சாலைகள், தெருக்களுக்கு வைக்கப்பட்டிருந்த ஜாதி பெயர்களை நீக்க உத்தரவிட்டார் * தென் மாவட்டங்களில் ஏற்பட்ட ஜாதி கலவரங்களை தொடர்ந்து, 1997ல் மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு வைக்கப்பட்டு இருந்த தலைவர்களின் பெயர்களை நீக்கி, அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.*ஜாதிய மற்றும் அரசியல் தலைவர்கள் சிலைகள் அனைத்தையும் தமிழகம் முழுதும் அப்புறப்படுத்தி, அவற்றையெல்லாம் சென்னைக்குக் கொண்டு வந்து, மியூசியம் போல அமைத்து, ஒரே இடத்தில் அனைத்து சிலைகளையும் வைக்கலாம் என, அப்போது நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் த.மா.கா., சார்பில் மூப்பனார் வலியுறுத்தினார். அதே போல், இப்போது தலைவர்கள் சிலைகளை வைக்க சமத்துவ பூங்கா அமைக்கலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றும், அரசியல் கட்சித் தலைவர்களும், சமூகத் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர்.