| ADDED : ஜன 06, 2024 08:19 PM
சென்னை:தனியார் வங்கியில் உதவி மேலாளர் வேலை வாங்கித் தருவதாக, 2 கோடி ரூபாய் மோசடி செய்த, தனியார் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.சென்னை ஸ்ரீ நகர், அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மாறன், 45; தனியார் கல்லுாரி முன்னாள் பேராசிரியர். இவர், 2015 - 16ல், சென்னை மதுரவாயலில் உள்ள கல்லுாரியில் பணிபுரிந்தார். அப்போது, அதே கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்த, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பட்டாபிராமன், 66, என்பவருடன் நட்பாக பழகினார். பட்டாபிராமனிடம், 'நான் கேரளாவிலும் வேலை பார்த்துள்ளேன். தனியார் வங்கி அதிகாரிகள் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளனர். 'அவர்கள் வாயிலாக, உங்களின் இரு மகன்களுக்கு, தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை வாங்கி தருகிறேன்' என்று கூறியுள்ளார். இதற்காக, பட்டாபிராமனிடம், 2 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பட்டாபிராமன் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையிலான போலீசார் விசாரித்து, மாறனை கைது செய்தனர்.