உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., கொண்டு வந்தது என்பதால் நிதி ஒதுக்காமல் விவசாயிகள் வஞ்சிப்பு

அ.தி.மு.க., கொண்டு வந்தது என்பதால் நிதி ஒதுக்காமல் விவசாயிகள் வஞ்சிப்பு

காரியாபட்டி; அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக காவிரி வைகை கிருதுமால் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் தி.மு.க., அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாக காரியாபட்டியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தில் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உதவியது திருச்சுழி தொகுதி. விவசாயிகள் நிறைந்த இப்பகுதிக்கு நீர் ஆதாரம் முக்கிய தேவையாக இருக்கிறது. அதற்காக அ.தி.மு.க., ஆட்சியில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் ரூ. 14 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முடிவு செய்து, முதல் கட்டமாக ரூ. 700 கோடி ஒதுக்கி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. முழுக்க மாநில அரசு நிதி. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக நிதி ஒதுக்காமல் விவசாயிகளை தி.மு.க., அரசு வஞ்சித்து வருகிறது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். தி.மு.க., அரசு வீட்டு மக்களுக்காக உள்ளது. அ.தி.மு. க., அரசு நாட்டு மக்களுக்காக உள்ளது. 71 ஆண்டுகால ஆட்சியில் வாங்கிய கடன் அளவை, 4 ஆண்டுகளில் ரூ. 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கி தி.மு.க., அரசு சாதித்திருக்கிறது. வரி உயர்வு, கடன் வாங்கியதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளனர். தி.மு.க., ஆட்சி அமைந்ததிலிருந்து கருணாநிதி குடும்பம் மட்டும்தான் வளமாக உள்ளது. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 98 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பச்சை பொய் கூறுகிறார்கள். அத்தியாவசிய பொருள்கள், கட்டுமான பொருட்களின் விலை உயர்வு. போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து வருவதுடன், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை நடக்காத நாட்களே இல்லை. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதக்கிறது. கட்சித் தலைவர், இளைஞர் அணி செயலாளர், மகளிர் அணி செயலாளர் என முக்கிய பதவிகளை கருணாநிதி குடும்பமே வைத்துக் கொண்டது. அ.தி மு.க., வில் அப்படி இல்லை. உழைத்தால் உயர்வுக்கு வர முடியும். 2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அ. தி மு .க ., ஆட்சி அமைந்தால் அனைவருக்கும் இடம் வாங்கி, வீடு கட்டி தரப்படும். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. இவ்வாறு அவர் பேசினார். நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், தினேஷ் பாபு வக்கீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை