சென்னை: மாஜி திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்குடன் தொடர்புள்ள அனைவரையும் கண்டறிய வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான மாஜி திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு பா.ஜ., சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்
ஜாபர் சாதிக் கைது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டில்லியில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்தும் விசாரணையில் ஜாபர் சாதிக் நிச்சயம் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார். அப்போது போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்ற உண்மைகள் வெளிவரும். இதன் மூலம் தி.மு.க. கலகலத்து போகும். போதைப்பொருள் கடத்தல் விவகாரம் லோக்சபா தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். தி.மு.க.வுக்கு அது கடும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அலைக்கழிப்பு
இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: கடந்த 2 ஆண்டாக, பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு, வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்தது, திமுக அரசின் மீதான குற்றச்சாட்டு என்று கூடத் தெரியாமல் அரசியல் செய்யப் கிளம்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அது மட்டுமல்லாது, மாவட்ட கலெக்டரிடம் கேட்ட பிறகு வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருக்கிறார்.
பலமுறை முறையிட்ட பின்னரும், எந்தத் தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் சின்னப்பிள்ளை.
இவை அனைத்தையும் மறைத்து விட்டு, வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.