உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக உளவுத்துறையில் முக்கிய பகுதிகளின் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு

தமிழக உளவுத்துறையில் முக்கிய பகுதிகளின் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு

தமிழக உளவுத்துறையில், வி.வி.ஐ.பி.,க்கள், வெளிநாட்டு தூதரகங்கள், அணு ஆய்வு மையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பிற்கு தனிப்பிரிவை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில அளவில் உளவுத்துறை என்பது மிகவும் முக்கியமானது. மாநிலங்களில் போலீசுக்கே தெரியாமல் நடக்கும் பல விஷயங்களை அறிந்து, அரசுக்கு சொல்லி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவி வருவது உளவுத்துறை. இந்த வகையில், தமிழக உளவுத்துறையும் பிரதான இடத்தை பெறுகிறது. தமிழக உளவுத்துறையின் தலைவராக, டி.ஜி.பி., ராமானுஜம் மற்றும் கூடுதல் டி.ஜி.பி.,யாக ராஜேந்திரனும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக, உளவுப்பிரிவு ஐ.ஜி., உள்ளூர் பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.,க்கள் உள்ளனர். இவர்களை தொடர்ந்து, உளவுப் பிரிவு டி.ஐ.ஜி., சிறப்புப் பிரிவு எஸ்.பி., ஆகியோர் மாநில உளவுப்பிரிவின் பிரதான அதிகாரிகளாக உள்ளனர்.

உளவுப்பிரிவு உள்ளூர் பாதுகாப்பு பிரிவின் கீழ், பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் கியூ பிராஞ்ச், பாதுகாப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு, தனியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.,க்கள் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் நக்சல்கள், பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் அடிக்கடி தலை தூக்குகின்றன. நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் ஊடுருருவும் பயங்கரவாதிகளும், நக்சல்களும் அந்த பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளான கோவில்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் இடங்கள், அணு ஆய்வு மையங்கள், மின்சார உற்பத்தி மையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி, அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றனர்.

மும்பையில் கடல் வழியாக தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் நடவடிக்கை, மற்ற மாநிலங்களிலும் முக்கிய பகுதிகள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, தற்போது தமிழக உளவுத்துறையில், முக்கி பகுதிகள் பாதுகாப்பை கவனிப்பதற்கான தனிப்பிரிவு ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை உள்ளூர் பாதுகாப்பு பிரிவின் கீழ், இந்த பிரிவு உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு தனியாக டி.ஐ.ஜி., அந்தஸ்தில் ஒரு அதிகாரியும், ஒரு எஸ்.பி., உள்ளிட்ட அதிகாகரிகள் மற்றும் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தை தவிர அருகில் உள்ள ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் முக்கிய பகுதிகள் பாதுகாப்பிற்கான தனிப்பிரிவு உள்ளதை கருத்தில் கொண்டு இந்த பிரிவை உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில், கர்நாடக உளவுத்துறை அதிகாரி ரானே, சென்னைக்கு வந்து, தமிழக உளவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து அறிந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்க விஷயம். தற்போது உருவாக்கப்படும் புதிய பிரிவு அதிகாரிகள், தமிழகத்தில் முதன்மையான அணு ஆய்வுமையங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், முக்கிய மின்சார உற்பத்தி மையங்கள், வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள், நினைவிடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், வி.வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கவனிப்பார்கள் என கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை