சென்னை : எம்.ஜி.ஆர்., கழக நிறுவனரும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன், 98, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (ஏப்., 09) சென்னையில் காலமானார்.திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., உருவாக்க உறுதுணையாக இருந்தவருமான வீரப்பன், சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.வெற்றி படங்கள்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று காலை காலமானார்.புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக் கோட்டையில் பிறந்த வீரப்பனுக்கு, ராசம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் அமைச்சரவைகளில் இருந்துள்ளார். எம்.ஜி.ஆரின் தாயார், 'சத்யா' பெயரில் பட நிறுவனம் துவக்கி, அதில் எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், சத்யராஜ் போன்றவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து, பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.அ.தி.மு.க., ஆட்சியில், 1977 முதல் 1986 வரை எம்.எல்.சி., பதவி வகித்தார். பின், 1986ல் திருநெல்வேலியில் நடந்த இடைத்தேர்லில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அவரது மனைவி ஜானகியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். ஜானகி முதல்வராவதற்கு உறுதுணையாக இருந்தவர். அ.தி.மு.க., இரண்டாக உடைந்து, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்த போது, ஜானகி அணிக்கு ஆதரவாக செயல்பட்டார். பிரிந்த அ.தி.மு.க., ஒன்றான பின், ஜெயலலிதா தலைமையை ஏற்றார்.கடந்த 1991ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் தொகுதியில் வெற்றி பெற்று, ஜெ., அரசில் அமைச்சரானார். 1995ல் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்து, ரஜினி நடித்த, பாட்ஷா படம் வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றி விழாவே ஆர்.எம்.வீரப்பனை அ.தி.மு.க.,விலிருந்து வெளியேற வைத்தது.கருத்து வேறுபாடு
அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும், ரஜினிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்த நேரம். பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவில் ரஜினி பேசுகையில், 'தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்து விட்டது' என்றார். அப்போது, பிரபல இயக்குனர் மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்தே, ரஜினி இப்படி பேசினார்.இதற்கு, மேடையில் இருந்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் எந்த விளக்கமும், மறுப்பும் தெரிவிக்காததால், கோபமான முதல்வர் ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்தும் அ.தி.மு.க.,விலிருந்தும் நீக்கினார்.அதனால், எம்.ஜி.ஆர்., கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கினார். தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்தார்.
அரசியல் சாணக்கியர்
ஆர்.எம்.வீரப்பன் வாழ்க்கை பாதை... * 1926 செப்., 9ல் அறந்தாங்கியில் பிறந்தார். * திராவிட கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அண்ணாதுரையுடன் பழகும் வாய்ப்பு பெற்றார். அவரது அறிவுறுத்தலின் படி, எம்.ஜி.ஆர்., நாடக மன்றத்தின் மேனேஜராக பொறுப்பேற்றார். * 1958: எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் நிர்வாக இயக்குனரானார். * 1964: 'சத்யா மூவீஸ்' நிறுவனத்தை தொடங்கி எம்.ஜி.ஆரை வைத்து தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக் ஷாக்காரன், இதயக்கனி உட்பட வெற்றிப்படங்களை தயாரித்தார். * அ.தி.மு.க., வை எம்.ஜி.ஆர்., துவக்கிய போது, ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார். * 1977 : எம்.ஜி.ஆர்., ஆட்சியில் ஹிந்து அறநிலையத்துறை, உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். * 1970 - 1980களில் அ.தி.மு.க., வின் சாணக்கியர் என அழைக்கப்பட்டார். * 1987: எம்.ஜி.ஆர்., மறைவுக்குப்பின் அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. அப்போது எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகியை முதல்வராக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். * 1989 : ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வில் இணை பொதுச்செயலர். * 1991 : ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி, இளைஞர் நலன் அமைச்சராக இருந்தார். * 1995: பாட்ஷா பட வெற்றி விழாவில் ரஜினி பேச்சால் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கம். எம்.ஜி.ஆர்., கழகத்தை துவக்கினார். * 2004: லோக்சபா தேர்தலில் (2004) தி.மு.க., வுக்கு ஆதரவளித்தார். * 2024 ஏப்., 9: உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.இரங்கல்
ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு, பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலினும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரையுலகத்தினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஆர்.எம்.வீரப்பன் மறைவு வேதனை அளிக்கிறது. எம்.ஜி.ஆர்.,ன் கொள்கைகளை பிரபலப்படுத்தியதற்காகவும், பொதுச்சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் அவர் நினைவு கூரப்படுவார். திரைப்பட உலகில் முக்கிய பங்கு வகித்தார். அவரது குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.கவர்னர் ரவி வெளியிட்ட இரங்கல் செய்தியில், முதுபெரும் அரசியல் தலைவரும், மிகச்சிறந்த திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.எம். வீரப்பன் மறைவால் ஆழ்ந்த வேதனை அடைந்தேன். பொதுவாழ்வுக்கும் தமிழ் சினிமா துறைக்கும் அவர் வழங்கிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஓம் சாந்தி!முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: ஆர்.எம்.வீரப்பன் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். ஆர்.எம்.வீரப்பன் மறைவு, அரசியல் உலகிற்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலகம், இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பேரிழப்பாகும் என்றார். தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆர்.எம்.வீரப்பன் காலமானார் என்ற செய்திக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் எனக்கூறியுள்ளார்.