முன்னாள் அமைச்சர் வீராசாமி அட்மிட்
சென்னை:முன்னாள் அமைச்சரும், தி.மு.க., மூத்த தலைவருமான ஆற்காடு வீராசாமி, 92, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.தி.மு.க., முன்னாள் பொருளாளரும், தமிழக மின்துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. வயது மூப்பு காரணமாக, தீவிர அரசியலில் இருந்து விலகி, ஓய்வில் உள்ளார். நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இதனால், முடநீக்கியல் மற்றும் பல்துறை டாக்டர்கள், அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவைப்பட்டால், அறுவை சிகிச்சை செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.