அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறது
சென்னை:சென்னை அண்ணா பல்கலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக, தி.மு.க.,வின் மகளிர் அணியைச் சேர்தோரோ, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருக்கும் கனிமொழியோ ஏன் குரல் எழுப்பவில்லை என பா.ஜ.,வைச் சேர்ந்த குஷ்பு கேள்வி எழுப்பி இருந்தார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக சென்னையில் பேட்டி அளித்துள்ளார் கனிமொழி.அப்போது அவர் கூறியதாவது:மணிப்பூரில் ஏராளமான பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர்; தாக்குதலுக்கும் ஆளாகினர். ஆனால், இன்று வரை அம்மாநிலத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்டப் பெண்களைப் பார்த்து நடந்த சம்பவம் குறித்து கேட்டு, ஆறுதல் சொல்லக்கூட போகாதவர் நம்முடைய பிரதமர் மோடி. ஆனால், அதை யாரும் பெரிதாக பேசுவதுமில்லை; விமர்சிப்பதும் இல்லை. ஆனால், சென்னை அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிக்கு ஏற்பட்ட கொடுமையை இழைத்தோருக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. சம்பவம் நடந்ததாக புகார் வந்ததுமே, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரோடு தொடர்புடைய 'அந்த சார் யார்?' என்பது குறித்தும், போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டிருக்கும் குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிவில் 'யார் அந்த சார்?' என கண்டிபிடித்து விட்டால், அவர்கள் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நடந்த சம்பவத்துக்காக என்னுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டுதான், குற்றத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஞானசேகரனை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உள்ளனர். வழக்கு கோர்ட்டில் உள்ளது. விசாரணையை நல்லவிதமாக நடத்தி, குற்றத்தை நிரூபித்து, குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதிலேயே அனைவருடைய கவனமும் இருக்க வேண்டும். தவிர, தேவையில்லாமல் அரசியல் செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் லாபத்தை அனுபவிக்க முயலக்கூடாது. பொள்ளாச்சி சம்பவத்தைப் போல, அண்ணா பல்கலை சம்பவத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. அங்கே பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தும், பல நாட்களுக்குப் பின்பும் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்கட்சிகள் பெரும் போராட்டம் நடத்தி, அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்த பின்பே, நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சென்னை அண்ணா பல்கலை மாணவி புகார் கொடுத்த சில மணி நேரங்களிலேயே சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முழுமையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். சம்பவத்தில் ஞானசேகரன் தவிர வேறு யாரும் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எப்.ஐ.ஆர்., வெளியானதற்கு தமிழக அரசு காரணமில்லை. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொண்டது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், மதுரையில் போராடிய பா.ஜ., மகளிரை ஆட்டை அடைக்கும் இடத்தில் அடைத்து வைத்தனர் என சொல்கின்றனர். அதை ஏற்க முடியவில்லை. ஆடு அடைக்கும் இடத்தில் ஏன் மனுஷங்களை அடைக்கப் போகின்றனர்?இவ்வாறு அவர் கூறினார்.