சென்னை : 'போலி பில் தயாரித்து வணிகம் செய்யும், 151 நிறுவனங்களின் ஜி.எஸ்.டி., பதிவு சான்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளது' என, வணிக வரித்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, வணிக வரித்துறை ஆணையர் விடுத்த செய்தி குறிப்பு:
இம்மாதம், 1ம் தேதி நடந்த இணை ஆணையர்கள் கூட்டத்தில், போலி பட்டியல் தயாரித்து வணிகம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. வணிக வரித்துறை புதிதாக பதிவு செய்த, 1.02 லட்சம் வரி செலுத்தும் வணிகர்களின் தரவுகளை ஆய்வு செய்ததில், 378 சந்தேகத்திற்கு உரிய பதிவுபெற்ற வணிகர்கள் கண்டறியப்பட்டனர்.இந்த நிதியாண்டில் மட்டும், சில மாதத்திற்கு உள்ளாகவே, 1,043 கோடி ரூபாய்க்கான உள்ளீட்டு வரியை தவறுதலாக வழங்கியுள்ளதும் தெரியவந்தது.இதை தொடர்ந்து, சந்தேகத்திற்கு உரிய நிறுவனங்களின் வியாபார இடம் மற்றும் செயல்பாடுகளை கண்டறிய, இம்மாதம் 14ம் தேதி, முதல் முறையாக மாநிலம் முழுதும் வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவு திடீர் ஆய்வு மேற்கொண்டது.அதன் விளைவாக, மாநில வரம்பிற்கு உட்பட்ட, 171 சந்தேகத்திற்கு உரிய இனங்களில், 151 வணிக நிறுவனங்கள், 457.76 கோடி ரூபாய் உள்ளீட்டு வரியை தவறுதலாக வழங்கியுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், சிறிய முதலீட்டில் நியாயமாக வணிகம் செய்யும் வணிகர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த வணிகர்களின் பதிவு சான்றுகள் உடனே, 'சஸ்பெண்ட்' எனப்படும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தவறுதலாக உள்ளீட்டு வரியை தடுக்கவும், பயனாளிகளிடம் இருந்து வரியை வசூலிக்கவும் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.