சாலை விபத்து மரணத்திற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : 'சாலை விபத்தில் கணவர் பலியானதற்கு மனைவிக்கு ஒப்பந்ததாரர் நிறுவனம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. நிறுவன இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து தொகையை கோர உரிமை உண்டு' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுந்தரி தாக்கல் செய்த மனு: எனது கணவர் சேதுராஜன். மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்றார். சீரமைப்பு மற்றும் பாலம் கட்டுமானப் பணி நடந்தது. தனியார் நிறுவனம் ஒப்பந்தப் பணியை மேற்கொண்டது. பள்ளம் இருந்தது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை. பள்ளத்தை கவனிக்காத கணவர் அதில் விழுந்து இறந்தார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை (என்.எச்.), ஒப்பந்ததாரர் நிறுவனத்தின் கவனக்குறைவால் சம்பவம் நடந்தது. ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: நிறுவனத்திற்கு எதிராக சிவகங்கை தாலுகா போலீசார் 2022ல் வழக்கு பதிந்தனர். விசாரணைக்குப் பின் மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது என வழக்கு முடிக்கப்பட்டது. இழப்பீடு வழங்குவதற்குநெடுஞ்சாலைத்துறை பொறுப்பேற்க முடியாது.நிறுவனம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கியதை மனுதாரர் பெற்றுக் கொண்டார். நிறுவன இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து தொகையை கோர மனுதாரருக்கு உரிமை உண்டு. இவ்வாறு உத்தரவிட்டார்.