உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்டர்லி முறையை முழுமையாக களைய டி.ஜி.பி.,க்கு உள்துறை செயலர் உத்தரவு

ஆர்டர்லி முறையை முழுமையாக களைய டி.ஜி.பி.,க்கு உள்துறை செயலர் உத்தரவு

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, விக்னேஸ்வர் பெருமாள் என்பவரின் மனைவி சுஜாதா தாக்கல் செய்த மனு:கடந்த ஆண்டு ஏப்ரலில், என் கணவர் கைது செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்குகளை விசாரிக்கும், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மத்திய சிறையின் ஒரு பிளாக்கில், 300 பேர் தான் இருக்க முடியும்; ஆனால், 950 பேரை அடைத்துள்ளனர்.ஒரு அறையில், 20 பேர் மட்டுமே தங்க முடியும்; ஆனால், 60 பேரை தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு, ஒரே ஒரு கழிப்பறை தான் உள்ளது. இதனால், சிறைவாசிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. என் கணவர், தொடர்ந்து அந்த சிறையில் இருந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவரை சிறைக்குள், குறைவான நபர்கள் இருக்கும் பகுதிக்கு, மாற்றக்கோரி மனு அளித்தேன்; அதை பரிசீலிக்கவில்லை. மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், உளவு துறையினரிடம் தகவல் பெற்று, விரிவான விசாரணை நடத்தி, சீருடை பணியாளர்களை வீட்டு வேலையில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக, உள்துறை முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, உள்துறை செயலரின் அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:காவலர்களை வீட்டு வேலை அல்லது தனிப்பட்ட வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து, டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 'ஆர்டர்லி' முறையை முழுமையாக களைய வேண்டும் என்றும், டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது. வீட்டு வேலையில் ஈடுபடும் காவலர்களை, உடனே சிறை பணிக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தவில்லை என்று, அனைத்து அதிகாரிகளும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என, சிறைத்துறை டி.ஜி.பி., உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்படும்; காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சிறைத்துறை டி.ஜி.பி., உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.இதைப்பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர், 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை