உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புலிகள் வாழும் பகுதியில் மக்களை எப்படி அனுமதிக்க முடியும்? மாஞ்சோலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

புலிகள் வாழும் பகுதியில் மக்களை எப்படி அனுமதிக்க முடியும்? மாஞ்சோலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி : 'புலிகள் வாழும் பகுதியில் மக்களை எப்படி அனுமதிக்க முடியும்' என, மாஞ்சோலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை விவகாரத்தில், அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, மாஞ்சோலை பகுதியை சேர்ந்த ஜான் கென்னடி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

மறுவாழ்வு வசதி

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாஞ்சோலை பகுதியில், 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களை அந்த பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு முன், அவர்களுக்கு தேவையான அனைத்து மறுவாழ்வு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.'ஏற்கனவே பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அவை எதுவும் செயல்பாட்டில் இல்லை. எனவே, மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுகி தீர்வு காண உத்தரவிட வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.அப்போது நீதிபதிகள், 'மாஞ்சோலை பகுதியில், தற்போது எத்தனை குடும்பங்கள் இருக்கின்றன' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டதாவது:ஏற்கனவே இருந்த குடும்பங்களில், 460 குடும்பங்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறி விட்டன. 80 குடும்பத்தினர் மட்டுமே தங்கி இருக்கின்றனர்.

அவகாசம்

மாஞ்சோலை விவகாரத்தில் மனுதாரர் தரப்பு குறிப்பிடாத மற்றொரு விஷயம், அது, புலிகள் வாழும் வனப்பகுதி என்பது. எனவே, அங்கு வசிப்பவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவதில் நிறைய சவால்கள் உள்ளன. அதனால் தான், மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்கிறோம். மாறாக, யாரையும் நாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றவில்லை.ஏற்கனவே மாஞ்சோலை பகுதியில் இருந்து வெளியேறிய குடும்பங்களுக்கு அரசு செய்து கொடுத்துள்ள மறுவாழ்வு திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தேயிலை தோட்ட நிர்வாகம் இந்த தொழிலாளர்களையும், அவர்கள் குடும்பத்தையும் கைவிட்ட போதும், தமிழக அரசு தொடர்ந்து அவர்களை பராமரித்து வருகிறது.இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், 'மாஞ்சோலை பகுதியில் குடியிருப்பவர்களை, உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று அரசு நிர்ப்பந்திக்கவில்லை. போதுமான அவகாசத்தை வழங்கி உள்ளது. 'மேலும், புலிகள் இருக்கும் பகுதி என, தமிழக அரசு குறிப்பிடுவதை மறுக்க முடியாது. 'இப்படியான பகுதியில், அங்கு உள்ள குடும்பத்தினர் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்? புலிகள் வாழும் பகுதியில் மக்களை எப்படி அனுமதிக்க முடியும்' என, கேள்வி எழுப்பியதோடு, வழக்கின் விசாரணையை மார்ச், 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை