கரூர் செல்ல அனுமதி கேட்கும் த.வெ.க.,வினர் மதுரை, ராமநாதபுரம் சென்றது எப்படி? சமூக வலைதளங்களில் வறுத்தெடுப்பு
சென்னை: த.வெ.க., தலைவர் விஜய், கடந்த செப்.27ல், கரூரில் பிரசாரம் செய்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது, போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சமூக வலைதளத்தில் தெரிவித்த சர்ச்சை கருத்துக்காக, கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்கு தொடரப்பட்டது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து, ஒரு மாதமாக, வீட்டிலேயே விஜய் முடங்கினார். வழக்குகளால், கட்சியின் மாநில நிர்வாகிகளும் தலைமறைவாகினர். இதற்கிடையே, கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து, ஆறுதல் கூற அனுமதி வழங்குமாறு, டி.ஜி.பி., அலுவலகத்தில், மனு அளிக்கப்பட்டது. அதற்கு, கரூர் மாவட்ட எஸ்.பி.,யை அணுகி, அனுமதி பெறும்படி பதில் தரப்பட்டது. விஜய் கரூர் செல்ல போலீஸ் அனுமதி பெறும் முயற்சிகள் நடந்து வருவதாக, த.வெ.க., நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதை காரணம் காட்டி, அவர்களும் கரூர் பக்கம் செல்வதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், நேற்று முன்தினம் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை ஒட்டி, மதுரை மற்றும் ராமநாதபுரத்திற்கு, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் சென்று, மரியாதை செலுத்தினர். கரூர் செல்ல, போலீஸ் அனுமதி தேவையில்லை என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், விஜய்க்கு ஆலோசனை வழங்கினர். அதை விஜய் தரப்பு கண்டுகொள்ளவில்லை. ஆனால், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு போலீஸ் அனுமதி இல்லாமலே, மாநில நிர்வாகிகள் சென்று வந்துள்ளனர். மதுரை, ராமநாதபுரம் சென்றது போலவே, கரூருக்கும் சென்று வர முடியும். ஆனால், போலீஸ் அனுமதி கிடைத்தால் மட்டுமே கரூர் செல்ல முடியும் என்பதைபோல, த.வெ.க.,வினர் பிடிவாதமாக உள்ளனர். இதை, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.